×

அறிவுசார் மையம் கட்டுமான பணி தீவிரம் சதுர்த்தி விழா சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

திருவாரூர்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்றும், இயற்கைக்கு உகந்த முறையில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பொது மக்களுக்கு மிகப்பெரிய கடமை உள்ளது. கடல், ஆறு மற்றும் குளங்கள் குடிநீர் ஆதாரமாக உள்ளது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்தபொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனம், எண்ணெய், வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல், செயற்கை சாய வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எனவே விநாயகர் சதுர்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post அறிவுசார் மையம் கட்டுமான பணி தீவிரம் சதுர்த்தி விழா சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Intellectual Center ,Chaturthi Festival ,Ganesha ,Tiruvarur ,Vinayagar Chaturthi festival ,Tiruvarur district ,Chaturthi ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா