அரியலூர்: நாம் அனைவரும் தமிழ் மொரியை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் கூறினார். அரியலூர் அரசு மருத்துக்கல்லூரி அனிதா நினைவு அரங்கத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நம் தமிழ்நாடு தொல்கலை வீடு என்னும் பொருண்மையில் தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் கருத்துகளை வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழர்மரபு தொன்மையானது, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி நம் தமிழ்க்குடி. உலகிற்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த சிறப்பை பெற்றவர்கள் தமிழர்கள். அதற்கு கீழடியே சான்று. இதேபோன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரமும் கட்டிட கலைக்கு உலகிற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டாகும். இனிவரும் காலங்களில் கங்கைகொண்ட சோழபுரம் போன்ற கோயிலை அமைப்பது என்பது இயலாத காரியம். இத்தகைய பல்வேறு பண்டையக் காலச் சிறப்புகளை நம் தமிழ்நாடு கொண்டுள்ளது. நாம் அனைவரும் தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பினை கல்லூரி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் தடை கற்களை படிகற்களாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும். எவரெல்லாம் தங்களது எதிர்கால கனவுகள் குறித்து தொடர்ந்து புதுப்பித்து கொள்கிறார்களோ அவர்களே மாபெரும் தமிழ்க்கனவின் விதைகளாவர். எனவே, வருங்கால இளைஞர் சமுதாயத்தினர் தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து மாபெரும் தமிழ்க் கனவு என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வை கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தி முடித்தது. இதன் 100வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் முக்கிய பகுதியாகும் என்றார். தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களை பாரட்டி பெருமித செல்வி, பெருமித செல்வன் எனப் பட்டம் சூட்டி சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் என பட்டம் சூட்டி சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.
The post அனைவரும் தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் appeared first on Dinakaran.
