×

மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜவுடன் மஜத கூட்டணி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேவகவுடா சந்திப்பில் உறுதி

* பாஜ 24 தொகுதி, மஜத 4 தொகுதியில் போட்டி

பெங்களூரு: மக்களவைக்கு அடுத்தாண்டு நடக்கும் பொது தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்து பேசியதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசியளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக 26க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணி உருவாக்கியுள்ளது. நாட்டில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அச்சத்திற்கு சென்றுள்ள பாரதிய ஜனதா கட்சியும் தங்கள் தலைமையில் பலமான கூட்டணிஉருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை தனது கூட்டணியில் சேர்த்து கொள்ள பாஜ தலைமை முடிவு செய்தது. இது தொடர்பாக மஜத தலைவர்களுடன் பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதன் முன்னோட்டமாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜ மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது மக்களவை தேர்தலில் இரு கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மக்களவை தேர்தலில் இரு கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து உறுதி செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 24 தொகுதியிலும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 4 தொகுதியில் போட்டியிடும் வகையில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டதாக தெரியவருகிறது. தேவகவுடா பிரதமரை சந்தித்து பாஜவுடனான கூட்டணியை உறுதி செய்ததை முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் வரவேற்றுள்ளனர். அதே சமயம் இக்கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, ‘பாஜ-மஜத கூட்டணியால் எனக்கோ, காங்கிரசுக்கோ எந்த கவலையும் இல்லை. மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்’ என்றார்.

The post மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜவுடன் மஜத கூட்டணி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேவகவுடா சந்திப்பில் உறுதி appeared first on Dinakaran.

Tags : Maajata ,Baja ,of ,Dehkavuda ,Modi ,Delhi ,Majatha 4 ,Bangalore ,Bharatiya ,Karnataka ,Devagavuda ,Dinakaran ,
× RELATED நடிகை ஷோபனா பாஜ சார்பில் போட்டியிட மாட்டார்: சசிதரூர் எம்பி பேட்டி