×

சேலம் விவிஐபி ஆசியுடன் மாஜி அமைச்சர்களை ஓரம்கட்டும் முன்னாள் எம்எல்ஏவை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லைன்னு புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல செ என்ற எழுத்துல தொடங்கி கம்முனு முடியுற தாலுகாவுல கனிம கொள்ளை அதிகளவுல நடக்குதாம். கடந்த பத்து வருஷமா நடந்து வருதாம். குறிப்பா சொல்லணும்னா.. ஜவ்வாது மலை அடிவார பகுதியில 10அடி அளவு வரைக்கும், பள்ளம் தோண்டியும் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்புல கொள்ளை நடக்குறதாக சமூக ஆர்வலர்கள், ரெவின்யூ, காக்கி, கனிமவளத்துறைன்னு தனித்தனியாக புகார் அளிச்சிருக்காங்க. ஆனாலும் நடவடிக்கை இல்லையாம். காரணம், சூளை ஓனர்ஸ், கனிமம், ரெவின்யூ, காக்கி என்று 3 துறைக்கும் பல எல்களை கைமாத்தி விடுறாங்களாம். இதனால எந்த தடையும் இல்லாம கொள்ளை நல்லா நடக்குதாம். புகார் அளிக்கும்போது, இது எங்க துறையை சார்ந்தது இல்லைன்னு 3 துறைகளை சேர்ந்தவங்களும் தட்டிக் கழிக்கிறாங்களாம். ஏதோ, அப்பப்ப காயலான் கடைக்கு செல்லக்கூடிய நிலையில இருக்குற ஓடாத டிராக்டர், டிப்பர் லாரின்னு பறிமுதல் செய்றாங்க. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் காக்கிகள் மறைத்து வர்றாங்க. இதனால சம்பந்தப்பட்ட உயர் காக்கிகள் கண்காணிச்சு கனிமக் கொள்ளைய பிடிக்க நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியிருக்குது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தரம் குறைந்த கட்டிட பணியால் அதிகாரிகள் டோஸ் வாங்கியிருக்கிறார்கள் போல..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. அல்வா மாவட்டத்தில தமிழ்நாடு சட்டசபை உறுதிமொழிக்குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.119 கோடியில் கட்டப்பட்டு வரும் 876 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை குழு ஆய்வு செய்தது. அப்போது அங்கு கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஆய்வு செய்த போது தரம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசு நிர்ணயித்துள்ள தரத்தின்படி கட்டுமானப் பணிகளுக்கு தரமான பொருட்களை பயன்படுத்த உத்தரவிட்டனர். இதை முடித்துக் கொண்டு அடுக்குமாடி கட்டிடத்தின் உள்ளே நுழைந்த போது அங்குள்ள கழிப்பறை சுவரை குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த சுவர் பூச்சு கையோடு பெயர்ந்து வந்து விட்டது. இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய குழுவினர், கட்டுமானப் பணியை ஒப்பந்த நிறுவனத்திற்கு கொடுத்தாலும் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கு தரமான வீடுகள் கிடைக்கும்னு வகுப்பு எடுத்தனர். உடனடியா அந்த சுவரை இடித்து விட்டு புதிதா கட்டுவதோடு, அதுகுறித்து அறிக்கையை குழுவிற்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர். இந்த விவகாரம் வாரிய மேலிடத்திற்கு போனால் அரசு நிர்வாகத்திடமிருந்து நடவடிக்கை பாயுமே என அதிகாரிகள் அரண்டு போயிருக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியில மாஜி அமைச்சர்களையே மாஜி எம்எல்ஏ ஓரம் கட்டிட்டாராமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. பூட்டு மாவட்டத்தில மூன்றெழுத்து இன்ஷியலைக் கொண்ட இலைக்கட்சி மாஜி எம்எல்ஏ, கட்சியின் டாக்டர் மற்றும் இளைஞரணி பிரிவிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். சமீபகாலமாக கொங்கு பகுதிகளில் நடக்கும் இலைக்கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இவரது மேற்பார்வையில் தான் நடக்கிறது. பூட்டு மாவட்டத்தில் 2 மாஜி அமைச்சர்களையும் தவிர்த்து விட்டு, இவர் தன்னிச்சையா செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பை, இவர் தனது கிளினிக்கில் நடத்தியது பெரும் சர்ச்சையானது. மேலும், இவர் பூட்டு மாவட்ட மாஜி அமைச்சர்களை விடவும், சேலத்துக்காரருடன் கூடுதல் நெருக்கம் காட்டி வருகிறாராம். இதனால யாரைப் பற்றியும் கவலைப்படாமல், மாஜி அமைச்சர்களிடம் எதுவும் ஆலோசிக்காமல், இலைக்கட்சி தொடர்பான நிகழ்வுகளை மேலிடத்தில் நேரடியாக கேட்டு முடிவு செய்து கொள்கிறாராம். இவரின் இந்த செயல்பாடுகளால், 2 மாஜி அமைச்சர்களும் தங்களது பகைமையை மறந்து, மாஜி எம்எல்ஏவின் புயல்வேக வளர்ச்சிக்கு எப்படி முட்டுக்கட்டை போடுவது என ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனராம். அதே நேரம், வரும் எம்பி தேர்தலில் போட்டியிட தலைமையிடம் இவர் சீட் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன…’’ என்றார் விக்கியானந்தா.

“கொடநாடு வழக்குல டிரைவரின் அண்ணனால் சேலத்துக்காரருக்கு பெரும் குடைச்சலாமே…” என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மம்மியின் கொடநாடு விவகாரம் கடந்த சில நாளாகவே பெரும் சர்ச்சைகளை கிளப்பிக்கிட்டிருக்கு. கனகமான டிரைவரின் அண்ணன் வெளியிடும் தகவல்கள் எல்லாம் சேலத்துக்காரருக்கு பெரும் குடைச்சலாகவே இருக்காம். சமீபத்தில் இது தொடர்பான கொஸ்டின் வந்த போது, கோர்ட்டில் கேஸ் இருப்பதால் நான் எதுவும் கருத்துகூற முடியாதுன்னு சேலத்துக்காரர் மழுப்பினாராம். வரும் 14ம் தேதி, டிரைவர் அண்ணனை நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருக்காம். இதில் ஏடாகூட தகவல்கள் ஏதும் வெளியாகி விடுமோ என்ற கிலியும் சேலத்துக்காரரின் ஆதரவாளர்களிடம் பரவியிருக்காம். இது ஒருபுறமிருக்க, சேலத்துக்காரரின் நிழலானவரு, டிரைவரின் அண்ணனை பற்றி மாங்கனி மாவட்ட எஸ்பியிடம் புகார் தெரிவிக்கப்போவதாக நேற்று தகவலை கசியவிட்டாராம். சேலத்துக்காரரு உள்ளூரில் இருக்கும் நிலையில் இந்த புகார் என்னவாக இருக்கும் என்று பரபரப்பு மாவட்டம் பூராவும் பரவிச்சாம். ஆனால் நிழலானவரு திடீரென ஜகா வாங்கிட்டாராம். இப்போதைக்கு புகார் அளிக்கவில்லை. அப்புறம் பார்ப்போம் என்று நைசாக நழுவிட்டாராம். நாமே வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்பது இலைகட்சி தலைமையின் கடைசி நேர மைன்ட் வாய்ஸ்சாம். இதனால் தான் நிழலானவரு நழுவிட்டாரு என்கின்றனர் விவரம் அறிந்த அடிபொடிகள்’’ என்றார் விக்கியானந்தா.

The post சேலம் விவிஐபி ஆசியுடன் மாஜி அமைச்சர்களை ஓரம்கட்டும் முன்னாள் எம்எல்ஏவை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,MLA ,Maji ,VVIP ,Peter ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...