×

ரூ.4 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் பயங்கரம் காரோடு பைனான்சியர் எரித்துக்கொலை: டிரைவர் உள்பட 4 பேர் கைது

குளத்தூர்: தூத்துக்குடி அருகே ரூ.4 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் சாயல்குடி பைனான்சியரை எரித்துக் கொன்ற டிரைவர், அவரது தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள வைப்பாறு, பல்லாகுளம் செல்லும் வழியில் தனியார் கருவாடு கம்பெனி எதிர்புறம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கார் தீப்பிடித்து எரிந்த கொண்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குளத்தூர் மற்றும் சூரங்குடி போலீசார் காரில் கரிக்கட்டையாக கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில், எரிந்த கார் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நாகநாதஜோதி (48) என்பவரது பெயரில் இருந்ததும், அங்கு கிடந்த செல்போன் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவருக்கு சொந்தமானதும் தெரியவந்தது. இதையடுத்து குளத்தூர் போலீசார், சாயல்குடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டனர். இதில் நாகநாதஜோதியை காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கன்னிராஜபுரத்தை சேர்ந்த மைக்கேல்ராஜை விசாரித்து வந்தது தெரியவந்தது. குளத்தூர் போலீசார், சாயல்குடி காவல்நிலையம் சென்று மைக்கேல்ராஜை குளத்தூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நாகநாதஜோதி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அவர் தொலைதூர வெளியூர்களுக்கு செல்லும்போது மைக்கேல்ராஜ் ஆக்டிங் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். நாகநாத ஜோதியிடம் பணப்புழக்கம் அதிகம் இருப்பதை கண்ட மைக்கேல்ராஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நகைகள் ஏலத்திற்கு வருவதாகவும், அதை மீட்க ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அப்பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளார். நாகநாத ஜோதி அடிக்கடி பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார். மேலும் வட்டியும் கேட்டுள்ளார்.

இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட மைக்கேல்ராஜ், நேற்று முன்தினம் விளாத்திகுளம் பகுதியில் ஒருவர் தனக்கு ரூ.4 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. அதை வாங்கி உங்களது கடனை அடைத்து விடுகிறேன் என நாகநாத ஜோதியை ஏமாற்றி அவரது காரிலேயே அழைத்து வந்துள்ளார். கார், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னிராஜபுரம் அருகே வந்தபோது மைக்கேல்ராஜ் தம்பி குழந்தைக்கனி (26), உறவினர்கள் மைக்கேல்ராஜ் என்ற மாரி (28), சுந்தரகணபதி என்ற கணபதி (28) ஆகியோர் காரில் ஏறி உள்ளனர். கார் சூரங்குடி அருகே குமாரசக்கனாபுரம் அருகே வரும்போது திடீரென காரை நிறுத்திய மைக்கேல்ராஜ், தம்பி, உறவினர்களுடன் சேர்ந்து நாகநாத ஜோதியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

பின்னர் விறகு, பெட்ரோல் வாங்கிக் கொண்டு குளத்தூரை அடுத்த வைப்பாறு, பல்லாகுளம் காட்டுப்பகுதியில் காருக்குள் விறகுகளை போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். அப்போது காரில் இருந்த எச்சரிக்கை ஒலி எழுப்பவே 4 பேரும் பதற்றத்தில் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றனர். அப்போது மைக்கேராஜ் செல்போன் தவறி விழுந்தை கவனிக்காமல் சென்றுள்ளனர். இந்த செல்போன் மூலமே மைக்கேல்ராஜ் உள்பட 4 பேரும் சிக்கி உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மைக்கேல்ராஜ், அவரது தம்பி குழந்தைக்கனி, மாரி, சுந்தரகணபதி (எ) கணபதியை போலீசார் கைது செய்தனர்.

The post ரூ.4 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் பயங்கரம் காரோடு பைனான்சியர் எரித்துக்கொலை: டிரைவர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kulathur ,Thoothukudi ,
× RELATED குளத்தூரில் கபடி போட்டி