×

போதையில் மட்டையான வேன் டிரைவர் நடுரோட்டில் தவித்த பள்ளி குழந்தைகள்: வாகனத்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் போட்ட போலீஸ்

கோவை: கோவை வடவள்ளி அருகே மது போதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய டிரைவர் குழந்தைகளுடன் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தூங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவைப்புதூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் சிலர் பள்ளியின் காண்ட்ராக்ட் வாகனங்களில் அனுப்பி வைக்கிறார்கள். அந்த வகையில் கோவைப்புதூரில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு காண்ட்ராக்ட் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று வடவள்ளியில் இருந்து 12 பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனம், குருசாமிநகர் பகுதியில் ரோட்டில் நின்றது. நீண்ட நேரமாக வாகனம் நின்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது, வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஸ்டியரிங் மீது சாய்ந்து தூங்கி கொண்டு இருந்தார். மாணவர்கள் எப்படி பள்ளிக்கு செல்வது? என தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது மது போதையில் வாகனத்தை ஓட்ட முடியாமல் தத்தளித்து ஸ்டியரிங் மேலேயே படுத்து தூங்கியது தெரியவந்தது. இதையடுத்து மாற்று வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மது போதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் வலியுறுத்தி வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செந்தில் (40) மீது வழக்குப்பதிவு செய்து ரூ.10,000 அபராதம் விதித்தனர்.

The post போதையில் மட்டையான வேன் டிரைவர் நடுரோட்டில் தவித்த பள்ளி குழந்தைகள்: வாகனத்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் போட்ட போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vadavalli ,
× RELATED யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது