×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொழிலாளி தொடையில் குத்திய கம்பியை அகற்றி சாதனை

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று பழவேற்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் தொடையில் குத்தியிருந்த மூன்றரை அடி நீள இரும்பு கம்பியை அகற்றி மருத்துவ குழுவினர் சாதனை படைத்தனர். பொன்னேரி அருகே பழவேற்காட்டை சேர்ந்தவர் காலிசா (60). கட்டிட கூலித்தொழிலாளி. இவருக்கு ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டபோதும், கட்டிட பணிகளுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலிசா கட்டிட பணிகளில் ஈடுபட்டபோது, 8 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது இடுப்புக்கு கீழே வலது தொடை வரை, அங்கிருந்த மூன்றரை அடி நீள இரும்பு கம்பி குத்தியபடி நின்றது. அந்த இரும்பு கம்பியுடன் காலிசாவை சக ஊழியர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கல்லூரி முதல்வர் பாலாஜி, துறை பேராசிரியர்கள் சத்யபிரியா, அசோகன் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர், காலிசாவுக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, இடுப்பிலிருந்து வலது தொடை வரை குத்தியிருந்த மூன்றரை அடி நீள இரும்பு கம்பியை வெளியே எடுத்து சாதனை படைத்தனர். தற்போது காலிசா மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த அறுவை சிகிச்சை ஒரு சவாலாக, அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் மருத்துவ குழுவினர் விரைவாக செய்து முடித்துள்ளனர். கூலித்தொழிலாளியின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு கட்டிட ஊழியர்களும் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.

 

The post ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொழிலாளி தொடையில் குத்திய கம்பியை அகற்றி சாதனை appeared first on Dinakaran.

Tags : Stanley Government Hospital ,Thandaiyarpet ,Palavekkad ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...