×

மனித-யானை மோதல்களை கட்டுப்படுத்த ஓசூர் வனக்கோட்டத்தில் 5 கி.மீ இரும்பு வட கம்பி வேலி

*₹1.75 கோடியில் அமைப்பு

கிருஷ்ணகிரி : ஓசூர் வனக்கோட்டத்தில் மனித-யானை மோதல்களை கட்டுப்படுத்த ₹1.75 கோடி மதிப்பீட்டில், 5 கி.மீ தொலைவிற்கு இரும்புவட கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் சுமார் 125-150 எண்ணிக்கையிலான யானைகள் கூட்டம், கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி காப்பு காடுகளில் நுழைந்து தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்க்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகாராஜகடை காப்புக்காடுகள் வழியாக, ஆந்திர மாநிலம் கவுன்டன்யா சரணாலயம் மற்றும் வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இவ்வாறு வரும் யானைக் கூட்டங்கள், ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும், மனித, கால்நடை உயிரிழப்புகள் மற்றும் பொருட்கள் சேதங்களை ஏற்படுத்தியும் வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பொருட்டு, பயிர் சேதங்கள் ஏற்படும் விவசாய நிலங்களை வனப்பணியாளர்கள் உடனுக்குடன் தணிக்கை செய்து, அதற்கான இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யானைகள் காப்புக்காடுகளை விட்டு வெளியேறி சேதங்கள் ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளில் எல்லையோரம் 300 கி.மீ தூரத்திற்கு யானை தாண்டா அகழிகள் வெட்டப்பட்டும், சூரிய மின்வேலி அமைத்தும், யானைகளுக்கு தேவையான நீர் ஆதாரங்கள், வனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அந்நிய களைச்செடிகளை அகற்றி அப்பகுதிகளில் யானைகள் மற்றும் இதர வன உயிரினங்கள் விரும்பும் தீவன பயிர்கள் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளிலிருந்து பயன்படுத்தப்படாத, உபயோகமற்ற கிரானைட் கற்களைக் கொண்டு, முக்கிய இடங்களில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு, யானைகள் காப்புக்காட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் பொருட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறியதாவது: யானைகளை காப்புக்காடுகளில் நிலை நிறுத்தும் பொருட்டு, காவிரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் காப்புக்காடுகளின் எல்லையோரம், இந்தியாவிலேயே முதன்முறையாக இரும்பு கம்பி வட தடுப்பு வேலி, ஓசூர் வனக்கோட்டத்தில் அமைக்கப்பட்டது.
காவிரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் வடக்கு எல்லையில், சுமார் 140 கி.மீ தொலைவிற்கு இக்கம்பி வட வேலி அமைக்கப்பட வேண்டியுள்ளது.

யானைகள் காப்புக்காடுகளில் இருந்து வெளியேறும் முக்கிய இடங்களை கண்டறிந்து, 2019-20ம் ஆணடிலிருந்து டானி திட்டம், பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி உதவியுடன், சுமார் 40 கி.மீ நீளத்திற்கு இரும்பு கம்பிவட தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, யானைகள் காப்புக்காட்டை விட்டு வெளியேறாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2022-23ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மூலம், ₹1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 5 கி.மீ தொலைவிற்கு இரும்புவட கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மனித-யானை மோதல்களை கட்டுப்படுத்த ஓசூர் வனக்கோட்டத்தில் 5 கி.மீ இரும்பு வட கம்பி வேலி appeared first on Dinakaran.

Tags : Osur ,Iron North Wire Fence ,Krishnagiri ,Osur Vanakotam ,Osur Wildstream ,
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது