×

நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.16: ஓசூர் பெண்ணிடம் ₹19.86 லட்சம் ஆன்லைன் மோசடி செய்த சம்பவத்தில், நாமக்கல்லை சேர்ந்த தாய், மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குயவர் தெருவைச் சேர்ந்த பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி, இவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் செயலியில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், தினமும் குறிப்பிட்ட நேரம் வேலை செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அந்த பெண், அந்த லிங்க் மூலமாக குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, அவர்கள் கூறிய வாட்ஸ் அப் குழுவிலும் சேர்ந்தார்.

பின்னர், அந்த பெண்ணிடம் போனில் பேசிய நபர், வர்த்தக நடவடிக்கைகளுக்காக பணம் அனுப்புமாறு சில வங்கி கணக்குகளை அனுப்பி வைத்தார். அதன்படி, அவரும் அந்த வங்கி கணக்குகளுக்கு, ₹19 லட்சத்து 86 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால், அதன் பிறகு, அந்த பெண்ணுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, அவரை தொடர்ந்து பணம் கட்டும்படி கேட்டு, போனில் சிலர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதையடுத்து, மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் பணம் அனுப்பி வைத்த வங்கி கணக்கு எண்ணுக்கான கே.ஒய்.சி. விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சம்மந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், நாமக்கல்லுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், நாமக்கல் மாவட்டம், சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்பவரும், அவரது மகன் சவுந்தரராஜன், புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜனின் தோழி திவ்யபாரதி, அவரது நண்பரான சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 4 பேரும், பல வங்கி கணக்குகளை தொடங்கி, பலரிடம் அதிக லாபம் தருவதாக கூறி, பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் இது போல, தமிழ்நாட்டில் வேறு எங்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,KRISHNAGIRI ,NAMAKKULU ,Osur Quawar street, Krishnagiri district ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...