×

விருத்தாசலம் அருகே வாய்க்கால் ஓடையில் கார் கவிழ்ந்து மூழ்கியது மனைவியுடன் இன்ஜினியர் உயிர் தப்பியது எப்படி?

*பரபரப்பு தகவல்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வாய்க்கால் ஓடையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் என்எல்சி பொறியாளர், அவரது மனைவி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (50). நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்க பொறியாளர். இவரது மனைவி பிரபாவுடன் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு காரில் சென்றுவிட்டு மீண்டும் நெய்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் வேப்பூர்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மணிமுத்தாற்றின் வாய்க்காலில் கவிழ்ந்தது.

அப்போது காரின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் திறக்க முடியாமல் கணவன், மனைவி இருவரும் காருக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர். நீண்ட நேரமாக போராடியும் வெளியே வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து வாய்க்காலில் உள்ள தண்ணீர் காருக்குள் சென்று கார் மூழ்கும் நிலையில் ஏற்பட்டது. இதனால் இருவரும் உதவி செய்யுங்கள் என அலறி கூச்சலிட்டனர். ஆனால் அதிகாலை நேரம் என்பதால் யாரும் இல்லை. யாரும் காப்பாற்ற வராததால் காருக்குள்ளேயே தம்பதி நீண்ட நேரமாக போராடியுள்ளனர்.

அப்போது சுதாரித்துக் கொண்ட ரமேஷ் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என தெரியாமல் காவல்துறை உதவி எண்ணுக்கு போன் செய்துள்ளார். இதனை அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, தண்ணீருக்குள் கார் கிடப்பதும், கணவன், மனைவி இருவரும் காருக்குள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, போலீசார் உதவியுடன் கணவன், மனைவி இருவரையும் காப்பாற்றினர். காரும் மீட்கப்பட்டது.

இந்த விபத்தில் என்எல்சி பொறியாளர், அவரது மனைவி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். காரை ஓட்டி வந்த ரமேஷ் தூக்க கலக்கத்தில் காரை வாய்க்காலில் விட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறிது நேரம் காலம் தாமதம் ஏற்பட்டு போலீசார் சென்று இருந்தால் கணவன், மனைவி இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

உயிர் காக்க உதவிய `வாட்ஸ்அப்’

காருக்குள் கணவன், மனைவி இருவரும் தவித்துக் கொண்டிருந்தபோது, எங்கு இருக்கிறோம் என தெரியாமல் காவல்துறையின் உதவி எண்ணுக்கு போன் செய்தபோது, விருத்தாசலம் காவல்துறையினரும் அது எந்த இடம் என தெரியாமல் அவரிடம் கேட்டபோது, ரமேஷும் இடம் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் ரமேஷ் இன் வாட்ஸ் அப் எண்ணில் ஷேர் லொகேஷன் அனுப்ப சொல்லி அதன் மூலம் அந்த இடத்தை கண்டறிந்து சென்றபோது ஆள் உயர செடி கொடிகளுக்கு நடுவே கார் கிடப்பதும், காரின் விளக்குகள் வெளிச்சம் தெரிந்ததையும் கண்டு போலீசார் 2 உயிர்களை காப்பாற்றி உள்ளனர். இதுபோல் பல இடங்களில் வாட்ஸ் அப் லொகேஷன் வசதி உயிர் காக்க உதவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விருத்தாசலம் அருகே வாய்க்கால் ஓடையில் கார் கவிழ்ந்து மூழ்கியது மனைவியுடன் இன்ஜினியர் உயிர் தப்பியது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Vritthachalam ,NLC ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே பரபரப்பு ரயிலில்...