×

ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.9.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை, இராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று கிடங்குகளை திறந்து வைத்து, திருப்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், அறிவியல் முறையில் சிறந்த கட்டுமானத்தை ஏற்படுத்தி வேளாண் பொருட்களின் தரம் மற்றும் அளவினைப் பாதுகாத்திடும் பொருட்டு விவசாயிகள் மற்றும் விவசாயத்தைச் சார்ந்த வர்த்தக நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் முறையே 50 விழுக்காடு பங்கு கொண்ட இரு பங்குதாரர்கள் ஆவர். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 60 இடங்களில் 269 கிடங்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனக் கிடங்குகளில், விவசாயிகள், வியாபாரிகளின் விவசாய விளைபொருட்கள், விதைகள், உரங்கள் சேமித்து வைக்கப்பட்டு அதற்கான ரசீது (Warehouse Receipt) வழங்கப்படுகிறது. மேலும், அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் சேமிக்கப்படும் பொருட்களையும் இருப்பில் வைத்து செயல்பட்டு வருகிறது.

2021-22ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி நிறுவப்படும் என்றும், 2022-2023ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் இராணிப்பேட்டை மற்றும் திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு வளாகங்களில் காலியாகவுள்ள இடத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், திருவப்பூரில் 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு, இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கப்பலூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு, என மொத்தம் 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று கிடங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும், திருப்பூர் மாவட்டம் – பல்லடம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம்- குனிச்சி ஆகிய இடங்களில் மொத்தம் 6 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 3400 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள இரண்டு சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

The post ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Chief Secretariat, Cooperative, Food and Consumer Protection ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...