×

பெரம்பலூர் நகர் பகுதியில் சீரான குடிநீர் வழங்க 32 கிணறுகளை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

பெரம்பலூர்,செப்.8: பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்கிட பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிணறுகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரு வாரத்திற்குள் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 32 கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீரின் அளவு, அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா, கிணறுகள் சுத்தமாக இருக்கின்றதா என்பது குறித்து ஆலம்பாடி, உப்போடை, கலெக்டர் கலெக்டர் அலுவலக வளாகம், துறை மங்கலம், செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரும்பாலான கிணறுகளில் அதிக அளவு தண்ணீர் இருந்ததை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், அதில் துறைமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்த நீரை பாட்டிலில் எடுத்து வெளியே கொண்டு வந்து குடித்து பார்த்தார்.

கிணற்று நீரின் சுவை நன்றாக இருந்ததால், பயன்பாடற்ற அந்த கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி சுத்தம் செய்து, பிறகு ஊரும் நீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட உத்தரவிட்டார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிணறுகளிலும் உள்ள நீரை ஆய்வுக்கு உட்படுத்தி குடிப்பதற்கு ஏற்ற நிலையில் தண்ணீர் உள்ள கிணறுகளில் இருந்து உடனடியாக நீரை விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயன்பாடற்ற நிலையில் அதிக அளவிலான நீர் இருப்பு உள்ள கிணறுகளில் இருந்து நீரை வெளியேற்றிவிட்டு, கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து பிறகு ஊரும் நீரை ஆய்வுக்கு உட்படுத்தி குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா என கண்டறிய வேண்டும்.

குடிப்பதற்கு உகந்த நிலையில் உள்ள கிணறுக ளில் இருந்து நகராட்சிப் பகுதி மக்களுக்கு சீரான இடைவெளியில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 32 கிணறுகளும் சுத்தம் செய்யப்பட்டு, அதில் உள்ள நீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஒருவார காலத்திற்குள் முழுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் ராமர், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post பெரம்பலூர் நகர் பகுதியில் சீரான குடிநீர் வழங்க 32 கிணறுகளை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur Nagar ,Perambalur ,District Collector ,Karpagam ,
× RELATED எல்லோருக்கும் ஒரே ஓட்டு தானே…...