×

நூற்றாண்டை கடந்த தர்மபுரி கிளைச்சிறை

தர்மபுரி, செப்.8: தர்மபுரி நகரத்தில் பழைய நீதிமன்ற வளாகத்தில் கிளைச்சிறை உள்ளது. இச்சிறைச்சாலை கடந்த 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 46 கைதிகள் அடைத்து வைக்கும் வகையில், இச்சிறைச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது 36 கைதிகள் உள்ளனர். தர்மபுரி கிளைச்சிறையில் பெண்களை தங்க வைப்பதில்லை. ஆண்கள் மட்டுமே அடைத்து வைக்கப்படுகின்றனர். அதேபோல், கொலை குற்றவாளிகளை அடைப்பதில்லை. 117 ஆண்டுகள் ஆகியும் பழமை மாறாத கட்டிடமாக தர்மபுரி கிளைச்சிறை உறுதியாக உள்ளது. இங்கு கைதிகள் படிக்க தினசரி நாளிதழ்கள், உலக நிகழ்வுகள் தெரிந்து கொள்ள டி.வி. உள்ளன. கைதிகளின் குறைகள் அவ்வவ்போது கேட்கப்பட்டு, நிவர்த்தி செய்யப்படுகிறது.

தினசரி அரசு மருத்துவர் சிறைக்கு சென்று கைதிகளிடம் உடல்நலம் விசாரிக்கிறார். உடல்நலம் குன்றி இருந்தால், அங்கேயே பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது. கைதிகளை உறவினர்கள் பார்க்க தினமும் காலை 10 முதல் 1 மணிவரையும், மாலை 3 மணிமுதல் 5மணிவரையும் அனுமதிக்கப்படுகிறது. சமீபத்தில் மனித உரிமை ஆணை குழு உறுப்பினர் வக்கீல் கண்ணதாசன், தர்மபுரி கிளை சிறையில் ஆய்வு செய்தார். அப்போது சிறைச்சாலை சிறப்பாக பராமரிப்பதாக பாராட்டி சென்றார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி கிளை சிறை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடம். இதனை முறையாக பராமரித்து வருகிறோம்,’ என்றனர்.

The post நூற்றாண்டை கடந்த தர்மபுரி கிளைச்சிறை appeared first on Dinakaran.

Tags : Darmapuri Glaucus ,Darmapuri ,Englishmen ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...