×

தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை ஊழியர்களை தாக்கி 5 கிலோ தங்கம் கொள்ளை: 4 பேர் கும்பல் கைவரிசை

தர்மபுரி: கோவையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்களின் காரை வழி மறித்து, சரமாரியாக தாக்கிய 4 பேர் கும்பல், காருடன் 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பிரசன்னா (40). இவர் கோவை ராஜவீதியில் நகைக் கடை வைத்துள்ளார். இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய நகைகளை வாங்குவதற்காக, ஊழியர்களான விஜயகுமார் (46), சுரேஷ்குமார்(45) மற்றும் ஜெய்சன்(40) ஆகியோரை, ஒரு காரில் பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் பெங்களூருவில் 5 கிலோ புதிய நகைகளை வாங்கிக்கொண்டு, காரில் கோவைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வந்த போது, பெரியாம்பட்டி ஆற்றுப்பாலம் பகுதியில், 2 கார்கள் முன் பின்னாக வந்து இவர்களது காரை மறித்தன.

பின்னர், இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 4 பேர் கும்பல், நகைக்கடை ஊழியர்கள் காரின் கண்ணாடியை இரும்பு ராடால் அடித்து நொறுக்கினர். உள்ளே இருந்த ஊழியர்கள் 3 பேரையும் வெளியே இழுத்து போட்டு இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினர். பின்னர், அந்த கும்பல் 5 கிலோ நகைகளுடன் காரை கடத்திச் சென்றனர். காயமடைந்த நகைக்கடை ஊழியர்கள், உடனடியாக உரிமையாளர் பிரசன்னாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக புறப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்து 3 ேபரையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், பிரசன்னா ஊழியர்களுடன் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று, கொள்ளை பற்றி புகார் தெரிவித்தார். இதையடுத்து, ேபாலீசார் அங்கு சென்று பார்த்தபோது, தாக்குதலுக்கு பயன்படுத்திய ஸ்பேனர், இரும்பு ராடு உள்ளிட்டவை கிடந்தது.
நேற்று மதியம் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, தலைமயிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை ஊழியர்களை தாக்கி 5 கிலோ தங்கம் கொள்ளை: 4 பேர் கும்பல் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Sraghupa Goa ,Darmapuri ,Goa ,Feel Goa ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...