×

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி செப்.21ம் தேதி கொச்சியில் தொடக்கம்

மும்பை: இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 10வது ஆண்டு தொடர் செப் 21ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. நாட்டின் முக்கிய விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐஎஸ்எல் கால்பந்து போட்டி உள்ளது. இந்தப் போட்டியின் 10வது தொடருக்கான போட்டியின் முதல்கட்ட அட்டவணை நேற்று வெளியானது. டிச.28ம் தேதி வரையிலான இந்த அட்டவணையில் அக்.9 முதல் அக்.20ம் தேதி வரையிலும் மற்றும் நவ.08 முதல் நவ.24ம் தேதி வரையிலும் நீண்ட இடைவெளிகள் விடப்பட்டுள்ளன. காரணம் இந்திய அணி சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்பதாலும், ஐஎஸ்எல் போட்டியை ஒளிபரப்பும் சேனல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒளிபரப்புவதாலும் இந்த இடைவெளி விடப்பட்டுள்ளதாம். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நாட்களில் ஐஎஸ்எல் ஆட்டங்கள் தடையின்றி நடக்கும்.

புதிதாக களம் காணும் பஞ்சாப் எப்சி உட்பட 12 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி சென்னை, ஐதராபாத், பெங்களூர், கொச்சி, கோவா, மும்பை, புவனேஸ்வரம், ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா, கவுகாத்தி, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறும். முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன்பகான் சூப்பர் ஜய்ன்ட்(ஏடிகே)-ஈஸ்ட் பெங்கால் எப்சி அணிகள் களம் காண உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 22லீக் ஆட்டங்களில் விளையாடி வேண்டிய நிலையில் தலா 12 லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டும் வெளியாகி உள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள், அரையிறுதி சுற்று ஆட்டங்கள், இறுதி ஆட்டங்களுக்கான அட்டவணை பின்னர் வெளியாகும்.

முதல் ஆட்டம்: சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் ஒடிஷா அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் செப்.23ம் தேதி புவனேஸ்வரமில் நடக்கிறது. சென்னையில் முதல் ஆட்டம் அக்.7ம் தேதி நடக்கும். அதில் மோகன்பகான் அணியை எதிர்கொள்ளகிறது.

நேரம்: பெரும்பான்மையான ஆட்டங்கள் தினமும் இரவு 8.00மணிக்கு தொடங்கும். சில ஆட்டங்கள் மாலை 5.30மணிக்கு ஆரம்பிக்கும். முதல் கட்ட அட்டவணைப்படி 5 ஆட்டங்கள் நடைபெறும்.

The post ஐஎஸ்எல் கால்பந்து போட்டி செப்.21ம் தேதி கொச்சியில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : ISL Football Match ,Kochi ,Mumbai ,Indian Super League ,ISL ,Dinakaran ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...