சென்னை: சென்னை குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசியதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளிலிருந்தும், மீஞ்சூர், நெம்மேலியில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமும் தினந்தோறும் 1000 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 85 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், மழைநீர் வடிகால் பணிகளின் இணைப்புப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும். நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகளையும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளையும், வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே மழைநீர் வடிகால், தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு appeared first on Dinakaran.
