×

இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மழையால் பாதிப்பு; வருவாய் குறைந்ததால் இழப்பீடு தரவேண்டும்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஜெய்ஷாவுக்கு கடிதம்


லாகூர்:2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை பாகிஸ்தான் தான் நடத்த வேண்டும். ஆனால், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி மறுப்பதை காரணம் காட்டி வேறு நாட்டில் நடத்துவதை பற்றி பரிசீலனை நடத்தியது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர். இதன் காரணமாக, அவர் தான் இந்த முடிவுகளை எடுக்கிறார் என்பதால் பாகிஸ்தான் அதை கடுமையாக எதிர்த்தது. பின்னர், பாகிஸ்தானில் பாதி போட்டிகளும், இந்தியா ஆடும் போட்டிகளை இலங்கையிலுமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் மாதம் இலங்கையில் மழை அதிகம் பெய்யும் என்பதால் அங்கே போட்டிகளை நடத்துவது பற்றி அப்போதே விமர்சனம் எழுந்தது. தற்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி உட்பட பல போட்டிகளில் மழை குறுக்கிட்டது. இதனால், ரசிகர்கள் வரத்தும் குறைந்தே காணப்பட்டது. டிக்கெட் விற்பனை பெருமளவில் சரிந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தான் இந்த தொடரை நடத்த உரிமை பெற்று இருக்கிறது என்ற வகையில் இலங்கையில் நடக்கும் போட்டிகளுக்கும் ஏற்பாடுகளை அவர்களே செய்து வருகிறார்கள். போட்டி வருமானத்தில் அவர்களுக்கு அதிக பங்கு உள்ளது.

இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி உட்பட பல போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை குறைவாக இருந்ததாக கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தங்கள் வருவாய் குறைந்ததாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இழப்பீடு கேட்டு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த கடிதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

The post இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மழையால் பாதிப்பு; வருவாய் குறைந்ததால் இழப்பீடு தரவேண்டும்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஜெய்ஷாவுக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Asia Cup cricket series ,Sri Lanka ,Pakistan Cricket Board ,Jaysha ,Lahore ,2023 Asia Cup cricket series ,Pakistan ,Asia Cup cricket ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...