×

நிலவுக்கு இலகுரக லேண்டரை வெற்றிகரமாக அனுப்பியது ஜப்பான்: பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் என தகவல்

தனேகாஷிமா: இந்தியா நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதை தொடர்ந்து ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இந்தியாவை தொடர்ந்து சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதற்காக மிகச்சிறிய லேண்டரை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் என்ற இலகுரக லேண்டரை ஜப்பான் வடிவமைத்து பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு வந்தது. சோதனைகள் திருப்திகரமான முடிவுகளை தந்ததை அடுத்து லேண்டரை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. கடந்த வாரம் லேண்டர் ஏவப்படவிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மொத்தம் 3 முறை ஜப்பானின் விண்கலம் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து H-IIA ராக்கெட் மூலம் தனது சந்திர பயணத்தை தொடங்கியது ஸ்லிம் லேண்டர். இதையடுத்து நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஜப்பானின் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதலில் 3 முதல் 4 மாதங்களுக்கு சந்திரனை சுற்றி வரும் லேண்டர், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிலவில் தரையிறங்க முயற்சிக்கும் என்று ஜப்பான் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் ஜப்பானின் இலகுரக லேண்டர் ஈடுபட இருப்பதாகவும் நிலவின் பாறைகளை ஆராய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்படாத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 திட்டப்படி, விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா சாதனை படைத்திருக்கும் நிலையில், பல்வேறு நாடுகள் நிலவின் மீதான ஆய்வை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளன.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி இருக்கும் நிலையில், அந்த பட்டியலில் இணைய ஜப்பான் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சந்திரனில் தரையிறங்க மேற்கொண்ட 2 முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஜப்பான் விஞ்ஞானிகள், விண்கலத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

The post நிலவுக்கு இலகுரக லேண்டரை வெற்றிகரமாக அனுப்பியது ஜப்பான்: பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : moon ,Japan ,Tanekashima ,India ,Dinakaran ,
× RELATED மீனம்