×

ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு

திருவள்ளூர், செப். 7: வருமான வரி இணை ஆணையரகம் டிடிஎஸ் ரேஞ்சு 3, சென்னை, உதவி இயக்குனரகம் (ஊராட்சி) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு வருமானவரி பிடித்தம் தொடர்பான கருத்தரங்கம், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி(கி.ஊ.) அலுவலர் ஜெ.மாணிக்கம் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் வருமானவரி அலுவலர் ராஜாராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், வருமானவரிச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளின் சாராம்சத்தை விளக்கினார். மேலும், வருமானவரிப் பிடித்தம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம், வருமானவரிப் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்த வேண்டிய கட்டாயம், டிடிஎஸ், டிசிஎஸ் காலாண்டு படிவம் தாக்கல் செய்யவேண்டிய தேவை, சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.

அதேபோல் சம்பளம் மற்றும் ஒப்பந்த செலவில் வருமானவரிப் பிடித்தம் செய்வதன் அவசியம் குறித்தும், உடைசல்களை விற்கும் பொழுது வருமானவரி வசூல் செய்ய வேண்டிய தேவை குறித்தும் விளக்கினார். மேலும், வருமானவரி அலுவலர் தர், பவர் பாயிண்ட் மூலம், ஒப்பந்த செலவில், ஊராட்சி தலைவர்கள் எவ்விதம் வருமானவரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதனை விளக்கினார். ஒப்பந்த வருமானத்தை பெறுபவர் தமது பான் கார்டை, ஆதாருடன் இணைக்கவில்லை யென்றால் 20 சதவிகிதம் வருமான வரிப் பிடித்தம் செய்ய வேண்டும். ஒருவேளை ஒப்பந்த வருமானம் பெறுபவர் தமது முந்தைய மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரி படிவத்தை, டிடிஎஸ் பற்று ₹50 ஆயிரமோ அதற்கு மேல் இருந்து, தாக்கல் செய்யவில்லை யென்றால் 5 சதவிகிதம் வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் வருமானவரி அலுவலர் செந்தில் குமார் பேசும்போது, வருமானவரி பிடித்தம் விதிகளை பின்பற்றவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். வருமானவரி பிடித்தம் செய்த தொகையை எவ்வாறு, இணையவழி மூலமாக மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல் டிரேசஸ் தளத்தில் டிடிஎஸ் காலாண்டு படிவங்களை எப்படி தாக்கல் செய்வது என்பது குறித்து வருமான வரி பிடித்தம் ஆலோசகர் ஜானகி செய்முறை விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட சாட்போட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், டிடிஎஸ் நண்பன் என்ற பெயர் கொண்ட ஒரு அப்ளிகேஷன், பிளேஸ்டோரில் ஆண்ட்ராயிட் மற்றும் ஐஓஎஸ் உபயோகிப்பாளர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும், வருமானவரி பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை http://www.tnincometax.gov.in என்ற இணையதள முகவரியின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இ – டிடிஎஸ் காணொளிகள், தமிழில் உருவாக்கப்பட்டு, அவை முதன்மை தலைமை ஆணையரகத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சானலில் https://youtube.com/@incometax tamilnaduandpuduc9090 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டிடிஎஸ் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கணினி வழி நகல், அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும், அதன் செயலாளர்களுக்கும் வாட்ஸ்அப் வழியாக பகிரப்பட்டது.

The post ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Heads ,Thiruvallur ,Chennai ,
× RELATED தொடர்ந்து 3வது முறையாக...