×

50 உழவர் சந்தைகளுக்கு ₹25 லட்சம் நிதி ஒதுக்கீடு அதிகாரிகள் தகவல் உணவு பாதுகாப்பு தர சான்று பெற

வேலூர், செப்.7: தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளுக்கு உணவு பாதுகாப்பு தர சான்று பெற ₹25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் இடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க கடந்த 1999ம் ஆண்டு தமிழக அரசு உழவர்சந்தை திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த உழவர் சந்தைகளின் முக்கிய நோக்கம், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும், நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதும் ஆகும். தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உழவர் சந்தைகள் புதுப்பொலிவு பெறுகிறது. குறிப்பாக பழுதடைந்து காணப்படும் உழவர் சந்தைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதோடு, 2022-2023ம் வேளாண் நிதி நிலை அறிக்கையில் உழவர் சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாலை நேரங்களில் உழவர் சந்தைகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்கள், பருப்பு வகைகள், வெல்லம், காளான், நாட்டு கோழி முட்டை மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் புதிய உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து, உழவர் சந்தைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில், உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உணவு பாதுகாப்பு தர சான்றிதழ்களை பெறுவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக ₹25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் அறிக்கையை ஆய்வு செய்து, உழவர் சந்தைகள் தகுதியானதாக கண்டறியப்பட்டால், சுத்தமான மற்றும் பசுமையான பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தையாக சான்றளிக்கப்படும். இந்த சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதற்காக முதற்கட்டமாக தமிழகத்தில் 50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2023-24ம் நிதியாண்டில் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் பெறுவதற்கு மொத்தம் ₹25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனர்.

The post 50 உழவர் சந்தைகளுக்கு ₹25 லட்சம் நிதி ஒதுக்கீடு அதிகாரிகள் தகவல் உணவு பாதுகாப்பு தர சான்று பெற appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED புதிய சட்டதிருத்தங்களில் யாருக்கு...