திருவண்ணாமலை, செப்.7: திருவண்ணாமலை மாவட்டத்தில், கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வங்கி கணக்குகள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களில், தனித்துவம் வாய்ந்ததாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைந்துள்ளது. இதுவரை எந்த திட்டத்துக்கும் இந்த அளவிலான நிதிச் செலவினம் இல்லை. ஆண்டுக்கு சுமார் ₹12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தை, அண்ணா பிறந்த தினமான வரும் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இத்திட்டத்தின் மூலம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1,000 அவர்களது வங்கிக்கணக்கில் அரசு நேரடியாக செலுத்த உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவோரின் குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்கள் இருந்தால் அவரும் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மாநிலம் முழுவதும் சுமார் 1.64 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து, விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என வீடு வீடாக அதிகாரிகள் களத்தணிக்கை செய்யும் பணியும் நடந்து முடிந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,627 ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்று பயன்பெறும் 7.89 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், 6 லட்சத்து 42 ஆயிரத்து 462 பேர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை அளித்தனர். அதைத்தொடர்ந்து, விண்ணப்பங்களில் தெரிவித்திருக்கும் விபரங்கள் சரியானதா என உறுதி செய்வதற்காக, வீடு வீடாக சென்று களத்தணிக்கை செய்யப்பட்டது. அதன்படி, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைப்படி, தகுதியானதாக கண்டறியப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பயனாளிகளின் உடைய பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்மந்தப்பட்ட நபர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம், விண்ணப்பம் ஏற்கப்பட்டது என தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள வங்கி சேமிப்பு கணக்கு விபரங்கள் சரியானதா, தற்போது பயன்பாட்டில் வங்கி கணக்கு உள்ளதா, உரிமைத்தொகையை வங்கியில் செலுத்தினால் உரிய நபருக்கு சென்றடையுமா என்பதை சரி பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் 15ஆம் தேதி போளூர் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார். எனவே, விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்படும் பட்டியலில், தகுதியான நபர்களின் பெயர்கள் ஒருவேளை விடுபட்டிருந்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு மனு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் தயார் வங்கி கணக்கு விவரம் சரிபார்க்கும் பணி தீவிரம் வரும் 15ம் தேதி திட்டம் தொடங்கப்படுகிறது appeared first on Dinakaran.
