×

கொடநாடு வழக்கில் பரபரப்பு தகவல்களை வெளியிட்ட ஜெ.கார் டிரைவரின் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி சம்மன்: 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலுக்கு வரும் 14ம்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். கொடநாடு வழக்கில் ஆவணங்களை மறைத்ததில் கனகராஜின் அண்ணன் தனபாலுக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த அவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவை சிபிசிஐடி கூடுதல் துணை கமிஷனர், தனபாலுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளார். நேற்று மாலை அந்த சம்மனை தனபால் பெற்றுக்கொண்டார். அதில், நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் குற்றஎண்158/2017ம் ஆண்டு நடந்த வழக்கில் கோவை குற்றப்பிரிவு குற்றபுலனாய்வு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவால் தொடர் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக தங்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் தாங்கள் வருகிற 14ம்தேதி காலை 10 மணிக்கு கோவை டாக்டர் பாலசுந்தரம் ரோடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் (மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர் முன்பு தவறாது ஆஜராக அறிவுறுத்தப்படுகிறீர்கள் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தனபால் கூறுகையில்,‘சிபிசிஐடி போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். கொடநாடு வழக்கில் எனது தம்பி கனகராஜ் என்னிடம் தெரிவித்த எல்லா தகவலையும் தெரிவிப்பேன்’ என்றார்.

* அப்ரூவர் ஆவாரா?
இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபாலும் ஒரு குற்றவாளியாக இருக்கிறார். தற்போது இந்த வழக்கில் உண்மைகளை சொல்லப்போகிறேன் என கூறியுள்ள நிலையில் அவர் அப்ரூவராக மாறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post கொடநாடு வழக்கில் பரபரப்பு தகவல்களை வெளியிட்ட ஜெ.கார் டிரைவரின் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி சம்மன்: 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,J.J. ,CPCIT ,Samman ,Janapal ,Salem ,Jayalalithah ,Kanakaraj Annan ,Tanapal ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக...