×

பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் துப்பாக்கி முனையில் கைது: விடுதியில் பதுங்கி இருந்தவர் என்ஐஏ அதிகாரிகளால் சுற்றிவளைப்பு; சதித்திட்டத்துக்கு பயன்படுத்த இருந்த டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை விடுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சையது நபில் அகமதுவை, என்ஐஏ அதிகாரிகள் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இயங்கி வந்தது. இதன் தலைவராக சையது நபில் அகமது இருந்து வருகிறார். இவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நிர்வாகிகளுடன் நேரடி தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த அமைப்புக்கு இந்தியாவில் நிதி வசூலித்து அனுப்பி உள்ளார். மேலும், அந்த அமைப்புக்கு இளைஞர்களை சேர்த்ததும், அவர்களுக்கு கேரள மலைப்பகுதி மற்றும் ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆயுத பயிற்சி அளித்ததும் உறுதியானது.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் தடை செய்யப்பட்ட அமைப்பின் மீதும், அதன் தலைவராக செயல்பட்டு வந்த சையது நபில் அகமது மீதும் தேசவிராத செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் ஆசிப் என்பவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் படி தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த சையது நபில் அகமதுவை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பல்வேறு வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது வெளிநாடு தப்பி செல்வதற்காக சென்னையில் பதுங்கி இருக்கும் தகவல் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் பல கட்ட முயற்சிக்கு பிறகு சையது நபில் அகமது சென்னை பாடி எம்.பி.நகரில் உள்ள விடுதியில் பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி முனையில் தங்கும் விடுதிக்குள் புகுந்து அதிரடியாக சையது நபில் அகமதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போலி ஆவணம் மூலம் நேபாளத்துக்கு தப்பி இருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் தொடர்பான சதி திட்டத்திற்கான டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சையது நபில் அகமதுவை கொச்சியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றனர். தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த தலைவன் சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் துப்பாக்கி முனையில் கைது: விடுதியில் பதுங்கி இருந்தவர் என்ஐஏ அதிகாரிகளால் சுற்றிவளைப்பு; சதித்திட்டத்துக்கு பயன்படுத்த இருந்த டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : ISIS ,Chennai ,NIA ,Syed Nabil Ahmed ,
× RELATED மாவோயிஸ்ட் தலைவரின் உறவினரின்...