×

துணை கலந்தாய்வுக்கான இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு: 199.5 கட்ஆப் மதிப்பெண் பெற்று மாணவி முதலிடம்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்கள் இருந்தது. இந்த ஆண்டு மூன்று சுற்றுகளாக நடந்த கலந்தாய்வு கடந்த 3ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில், 90 ஆயிரத்து 201 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்து கல்லூரிகளில் சேர்ந்தனர். இதையடுத்து, விண்ணப்பிக்காதவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதி தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கான துணை கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, துணை கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவில் 13 ஆயிரத்து 244 பேரும், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் 4 ஆயிரத்து 466 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 710 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியலில், பொதுப்பிரிவில் 200க்கு 199.5 கட்-ஆப் மதிப்பெண் பெற்று மாணவி வேதலட்சுமி முதல் இடத்தையும், 199 மதிப்பெண்ணுடன் ராம் பிரசாத் 2ம் இடத்தையும், 198.5 மதிப்பெண்ணுடன் துருவன் 3ம் இடத்தையும் பிடித்தனர்.

7.5%உள் ஒதுக்கீட்டு பிரிவில் அரசு பள்ளி மாணவி 188.5 கட்-ஆப் மதிப்பெண்ணுடன் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இவர்களுக்கான துணை கலந்தாய்வு 6ம் தேதி துவங்கி 9ம் தேதி முடிகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்.சி.ஏ. பிரிவில் காலியாக உள்ள இடங்கள் எஸ்.சி. பிரிவுக்கு மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான இன்ஜினியரிங் கலந்தாய்வு வருகிற 11ம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது.

The post துணை கலந்தாய்வுக்கான இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு: 199.5 கட்ஆப் மதிப்பெண் பெற்று மாணவி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...