×

வடமாநில ஊடகங்களில் காரசார விவாதம்; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூடுகிறது?… எதிர்கட்சிகள் மட்டுமின்றி பலருக்கும் குழப்பம்


புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்த ரகசியம் காக்கப்பட்டு வருவதால் எதிர்கட்சிகள் மட்டுமின்றி ஊடகங்களிலும் பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எதற்காக இந்த சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படுகிறது என்று ஒன்றிய அரசின் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. சிறப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலைகளை வெளியிடுமாறு எதிர்கட்சிகள் கோரி வருகின்றன. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், அதில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரும் சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்த எழுதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நேற்று நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கான காரணத்தை ஒன்றிய அரசு அறிவிக்காதது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், ‘எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டியுள்ளது. இதுபோன்று மிகவும் அபத்தமாக செயல்பட்ட அரசை பார்த்திருக்கிறீர்களா? சிறப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். எதற்காக இந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்கள் என்பது தெரியவில்லை. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமர்வதா? அல்லது புதிய கட்டிடத்தில் அமர்வதா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

எம்பிக்கள் கூட்டத் தொடரில் பங்கேற்கும் போது கூட, சிறப்பு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் சிறப்பு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை சொல்லவில்லை என்றால், நாங்கள் எங்களது நிகழ்ச்சி நிரலைச் சொல்வோம். எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் மூலம் நிகழ்ச்சி நிரலை முன்வைக்கும்’ என்றார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, பொது சிவில் சட்டம், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்றுவது போன்ற பல விவாதங்கள் ஊடகங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

மேலும் 75வது சுதந்திர தின ஆண்டு என்பதால், மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை எடுத்து கூறும் கூட்டமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் அளித்த பேட்டி ஒன்றில், ‘பெண்களுக்கு விரைவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் நியாயமான உரிமை கிடைக்கம்’ என்றார். எனவே ஒன்றிய அரசின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நோக்கம் குறித்த ரகசியங்கள் காக்கப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

The post வடமாநில ஊடகங்களில் காரசார விவாதம்; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூடுகிறது?… எதிர்கட்சிகள் மட்டுமின்றி பலருக்கும் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Parliament ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...