நன்றி குங்குமம் ஆன்மிகம்
பாரதப் போர் நடந்துகொண்டிருந்த நேரம். போர் முடிந்ததும் அர்ஜுனன் நேரடியாக, தான் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவான். ஆனால், கிருஷ்ணரோ குதிரைகளைக் குளிப்பாட்டி வருடிக் கொடுத்து, உணவிட்டு, நீர் காட்டிய பிறகுதான் தங்குமிடம் செல்வார். இதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன், வேலைக்குத்தான் ஏராளமான ஆட்கள் இருக்கிறார்களே… அவர்களைக்கொண்டு அந்த வேலைகளைச் செய்யக்கூடாதா? என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர், ‘‘நான் தேரோட்டி. இந்த வேலையை நான்தான் செய்ய வேண்டும். கடமையைச் செய்தேன். அதுதானே தர்மம்’’ என்றார்.
உணவின் மேன்மை எது?
பாரதப் போருக்கு முன், பாண்டவர் தூதுவராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச் சென்று உணவருந்திவிட்டு, இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் போன்றவர்கள், ‘‘உனக்காக நாங்கள் காத்திருக்க… நீயோ, தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டிருக்கிறாயே’’ என்று கேலி செய்தனர். அவர்களிடம், ‘இறை நாமத்தை தினமும் உச்சரிக்கிற, இறைவனின் அற்புதங்களையும், லீலைகளையும் உபநியாசம்’ பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு. அதனால், விதுரர் வீட்டு உணவை உண்டேன், என்றார் பகவான் கிருஷ்ணர்.
நண்பரை அன்பால் நெகிழச் செய்த கண்ணன்
ஏழைகளை நண்பனாக ஏற்றுக் கொள்ளவே தயங்கும் காலமிது. ஆனால், கிருஷ்ணர் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் விளையாடிய ஏழைக் குசேலரை, அவர் மறக்கவில்லை. ஒருமுறை உதவி கேட்க குசேலர் வந்தபோது, தன்னைக்காண குசேலர் வந்துள்ளார் எனத் தெரிந்ததும், கண்ணன் தன் படுக்கையிலிருந்து எழுந்து ஓடோடிச் சென்று வரவேற்றார்.
அப்போது, கண்ணன் துவாரகாபுரி மன்னன். ‘‘கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா? எனக்கேட்டு ‘‘உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே! என்று சொல்லி அவற்றை வருடிக் கொடுத்தார்.’’ கண்ணனின் அன்பைக் கண்ட குசேலர் மெய்மறந்து போய், இப்படிப்பட்ட நண்பனிடம் உதவி கேட்பதா? என எதையும் கேட்காமலேயே திரும்பினாராம் குசேலர்.
தாய்க்கு முதல் பூஜை காணும் பெருமாள்
திண்டுக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள ரெட்டியார் சத்திரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மலை மீது அமைந்துள்ள கோயில் கோபிநாத சுவாமி கோயில். புல்லாங்குழல் வாசித்தபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்் இந்த பெருமாள். இவரது சந்நதி முன் மண்டபத்தில் இவரது தாயார் கோப்பம்மாள் காட்சி தருகிறார். தாய்க்கே முக்கியத்துவம் தரவேண்டுமென்பதன் அடிப்படையில் இவரை பூஜித்த பின்பே கோபிநாதருக்கு பூஜை செய்கின்றனர்.
தாயும், பிள்ளையும் காட்சி தரும் தலம் என்பதால் குழந்தை பாக்கியம் தரும் தலமாக உள்ளது. இங்கு மூன்று கால பூஜையின்போது சேகண்டி ஒலித்து சங்கு முழங்கும் வழக்கம் உள்ளது.
இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா 3 நாட்கள் நடக்கும். அப்போது மட்டும் உற்சவர் கிருஷ்ணர் மலையிலிருந்து புறப்பாடாகி வீதியுலா சென்று திரும்புவார்.
தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி
The post கடமையைச் செய்த கிருஷ்ணர் appeared first on Dinakaran.
