×

8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு; 23 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: உத்தர பிரதேச கோர்ட் தீர்ப்பு


கான்பூர்: உத்தரபிரதேசத்தில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 23 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் சவுபேபூர் அடுத்த பிகாரு கிராமத்தை சேர்ந்த பிரபல மாபியா கும்பல் தலைவன் விகாஸ் துபேயின் வீட்டில் கடந்த 2020 ஜூலையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்த முயன்றனர். அப்போது விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு டிஎஸ்பி உட்பட 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்த விகாஸ் துபேவை போலீசார் கைது செய்த நிலையில், உஜ்ஜையினியில் இருந்து கான்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 6 பேர் அடுத்தடுத்து என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கு கான்பூர் டெஹாட்டின் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி துர்கேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 23 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை நீதிமன்றம் விடுவித்தது.

The post 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு; 23 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: உத்தர பிரதேச கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Kanpur ,Dinakaran ,
× RELATED வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்;...