×

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது

கிருஷ்ண ஜெயந்தி 6.9.2023

1. முன்னுரை

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன்
பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறைந்ததம்மா’’

– என்ற பாடல் எல்லோருக்கும் தெரியும்.

கண்ணன் பிறந்த தினம் “ஸ்ரீஜெயந்தி” “கிருஷ்ண ஜெயந்தி” என்றெல்லாம் பல பெயர்களில் கொண்டாடப்படும். கண்ணன் அவதார தினமான கோகுலாஷ்டமி, செப்டம்பர் 6-ஆம் தேதி குதூகலமாகக் கொண்டாட இருக்கிறோம். குழந்தை கண்ணனின் இந்த குதூகல விழாவில், கண்ணனின் பெருமைகளையும், பாடல்களையும், கதைகளையும் முப்பது முத்துக்களாக காண்போம்.

2. கண்ணனை நினைத்தால் நிம்மதி கிடைக்கும்

கண்ணனின் பெருமைகளைப் பாடாத கவிஞர்கள் இல்லை. காவியங்கள் இல்லை. புராணங்கள் இல்லை. வேதங்களை தொகுத்த வியாசமகரிஷி ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தையும்
எழுதினார்.

நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர்
எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.

மிகச் சிறந்த பிரம்ம சூத்திரத்தையும் தொகுத்து இயற்றினார். இத்தனை சாதனைகளைச் செய்தும் அவர் மனம் திருப்தி அடையவில்லை.

3. ஸ்ரீபாகவதத்தால் வருத்தம் தீர்ந்தது

ஏன் தனக்கு சந்தோசம் இல்லை. நிம்மதி இல்லை. அமைதி இல்லை எனத் தவித்தார். நாரதர் அப்போது தோன்றி உபதேசித்தார். கண்ணன் கதையைப் பாடுங்கள். உங்கள் மனப்புண் ஆறும். ஆனந்தம் கிடைக்கும்.

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

தேவகிக்கு பரமானந்தம் தந்தவன். உங்களுக்கும் தருவான். வியாசர் திருப்தி அடைந்தார். கண்ணனின் கதையைச் சொல்லும் ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றினார். அதன் பின்தான் மனசு சந்தோஷமும் சமாதானமும் நிம்மதியும் அடைந்தது.

4. கண்ணன் எனும் மன்னன் பேரைச் சொல்லுங்கள்

கண்ணனை நினைத்தாலும் வணங்கினாலும், ஏன் ஒரே ஒரு முறை அவன் திருவுருவத்தைப் பார்த்தாலும் நிம்மதி தன்னால் வந்துவிடும். அவன் கதைகளைக் கேட்டால் இன்பம் கிடைக்கும். மங்கலங்கள் தன்னால் சேரும். கண்ணனின் அற்புதத் கருணை அது.நம்மாழ்வார், “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்றார். இதையே கண்ணதாசன் எளிய தமிழில் ஒரு திரைப்படப்பாடலில், ‘‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல” என்று பாடினார்.

5. பிறந்த நாளைக் கொண்டாடிய பெரியாழ்வார்

கண்ணனின் பிறந்த நாளை முதன் முதலில் கொண்டாடியவர் பெரியாழ்வார். கண்ணன் பிறந்த நாள் விழா நிகழ்வுகளை ஒரு பதிகமாகப் பாடி இருக்கிறார். கண்ணன், ஆயர்பாடியில் பிறந்தான் அல்லவா. அவர்கள் தயிர் கடைந்து கொண்டிருந்த உறியை அப்படியே எடுத்து வந்து முற்றத்தில் மகிழ்ச்சியோடு உருட்டி நின்று ஆடினார்களாம். நல்ல மணமுள்ள நெய், பால், தயிர் எடுத்து ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டார்களாம். இந்த ஆட்டத்தில் அவர்கள் கூந்தல் அவிழ்ந்தது தங்களை மறந்து ஆடினார்களாம். இவற்றையெல்லாம் ஒரு பாடலில் சொல்லுகின்றார்.

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே

6. உறியடித் திருவிழா

“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் “பாடல் காட்சியை அப்படியே பல ஊர்களிலும் நடைமுறைக் காட்சியாக நாம் காணலாம். கோகுலாஷ்டமியின் போது உறியடி விழா பல ஊர்களில் நடக்கும். இரண்டு கம்பங்கள் நட்டு, மேலே பால், வெண்ணெய், நெய், தயிர் பானைகள் தொங்கும். வழுக்கு மரத்தில் ஏறி அடிக்க வேண்டும். ஒரு நீண்ட குச்சியை வைத்து மரம் ஏறி அதைச் செய்ய முயலும் போது நான்கு புறங்களில் இருந்தும் தண்ணீரை வாரி இறைப் பார்கள். மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பார்கள். மஞ்சள் வஸ்திரத்தை அணிந்து கொண்டு, துளசி மாலையை சூட்டிக் கொண்டு, இளைஞர்கள் உற்சாகமாக இந்த கோலாகலத்தில் கோகுலாஷ்டமி கொண்டாடுவது பெரியாழ்வார் காலத்திலிருந்து இருக்கிறது. வரகூர் உறியடித் திருவிழா விசேஷமானது.

7. வரகூர்

வரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகிராமம். வரகூர் மக்கள், இங்குள்ள வெங்கடேசப் பெருமாளை தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். இங்கே, பெருமாள் சந்நதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் பலரும் வருகின்றனர். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், வரகூர் என்றானது.

அதாவது, நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன்றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி. இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தலபுராணம். இங்கு கோகுலாஷ்டமி 10 நாட்கள் நடைபெறும். அதில், உறியடி உற்சவம் ஏக விஷேஷம். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார்.

8. உறியடி ஏன்?

கண்ணனின் லீலைகளில் ஒன்று உயரே கட்டப்பட்ட உறியிலிருந்து எப்படியோ ஏறி, திருடுவது. இதற்கு சிறுவர்களின் முதுகில் ஏறுவது, பானையை உடைப்பது. வழுக்கி மேலே ஏறுவது என பல வழிகளை கையாண்டதாக புராணங்களில் உண்டு. அந்த பாவனைதான் இத்தனை விழாக்களும். உறியடி நாளன்று காலையில் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் செய்வார்கள். இரவு உறியடிக் கண்ணனாக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக் கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள்.

உறியில் கட்டப்பட்ட கயிறு மேலும் கீழும் ஆட்டப்பட்டு, சிறுவர்கள் மற்றும் ஆண்கள், கையில் தடிகளுடன் ‘‘உறியடியோ கோவிந்தா’’ என்று கோஷம் போடுவார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு, உறி உடைக்கப்பட்டு, ‘‘நாராயண கோவிந்தா’’ மற்றும் ‘‘வெங்கட்ரமண கோவிந்தா’’ என்ற கோஷம் விண்ணை முட்டும். உறியடி முடிந்ததும் வழுக்கு மரம் ஏறுதல் நடக்கும். 40 அடி உயர எண்ணெய் பூசிய வழுக்கு கம்பத்தின் உச்சியில் மூங்கில் தட்டில் கட்டப்பட்ட பெரிய முறுக்குகள், சீடைகள் இருக்கும். மீண்டும், ‘நாராயண கோவிந்தா’’ மற்றும் ‘‘உறியடியோ கோவிந்தா’’ என்ற முழக்கங்கள். இதைப்போல எல்லா ஊர்களிலும் உறியடி உற்சவம் உண்டு.

9. பிறந்த நாள் பரிசு

கண்ணனுக்கு தொட்டில் போடும் விழா நடைபெறுகிறது. தேவாதி தேவன் வந்து பிள்ளையாக அவதரிக்கிறானே, இதைக் கொண்டாட வேண்டுமே என்று பல்வேறு பரிசுப்பொருட்களை தேவர்கள் அளித்ததாக பெரியாழ்வார் ஒரு பாடலில் சொல்கிறார். மாணிக்கத்தொட்டிலை பிரம்மன் அளித்தானாம்.

அருமையான ஒளிபொருந்திய மாதுளம்பூ கோர்த்த அரைவடத்தை ஈசன் தந்தானாம். அழகான கிண்கிணியை இந்திரன் மகிழ்ச்சியோடு தந்தானாம். அமரர்களில் ஒருவர் வலம்புரிச் சங்கும், ஒருவர் சேவடியும், ஒருவர் வளையல்களும் என்று விதவிதமான பரிசில்களைத் தந்தார்களாம்.

10. பரிசோடு செல்லுங்கள்

குழந்தைகளையும், இறைவனையும், முதியவர்களையும், நோயாளிகளையும் பார்க்கச்செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இங்கே தெய்வமே குழந்தையாக அவதரித் திருக்கிறதே. அதனால், ஒவ்வோரிடமும் பரிசில்கள். மகாலட்சுமி தாயாரோ அற்புதமான பரிசுகளை கண்ணனுக்கு அளித்தாரம்.

கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ
குடந்தைக் கிடந்தானே தாலேலோ
– என்பது பெரியாழ்வார் பாசுரம்.

(நமது வீட்டில் குழந்தைகளை தாலாட்டும்போது இந்தப் பாடல்களைப் பாடலாம். ஒழுக்கமும் பக்தியும், தமிழும் வளரும்.)

11. பொம்மைகளையும் படையுங்கள்

கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்தப் பாடல்களை மனதில் வைத்து பல அழகான விளையாட்டுப் பொருட்களையும் நிவேதனங்களோடு சேர்த்து படைக்க வேண்டும். முக்கியமாகப் பொம்மைகள், பிள்ளைகளின் எழுது பொருள்கள், புத்தகங்கள் என்று படைக்கலாம். கண்ணனுக்கு இவற்றையெல்லாம் சமர்ப்பித்துவிட்டு, பூஜை முடிந்த பிறகு, குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களைத் தரலாம். அழகான கண்ணனுடைய கதைகளை சொல்லச் சொல்லியோ, நடித்துக் காட்டியோ இந்தப் பரிசு பொருள்களை அளிக்கலாம். நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கண்ணனின் அம்சம்தான். அதனால்தான் எந்த குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போட்டாலும் கனகச்சிதமாக பொருந்திவிடுகிறது. அதற்காகத்தானே கோகுலாஷ்டமி வருகிறது.

12. யமுனையே வழி விடு

கல்கண்டில் எந்தப் பக்கம் எடுத்துச் சாப்பிட்டாலும் இனிப்புதான். சுவை குறையாது. அது போல், கண்ணனின் இனிய கதைகளை பாகவதத்திலும், ஆழ்வார்கள் பாசுரங்களிலும், அஷ்டபதியிலும், நாராயணீயத்திலும் என எங்கு படித்தாலும், எங்கு கேட்டாலும் அளவற்ற சந்தோஷத்தைத் தரும். ஒரு காட்சியைப் பாருங்கள். வசுதேவர் குழந்தையை, சிறைச் சாலையிலிருந்து யசோதையின் வீட்டில் சேர்ப்பதற்காக நள்ளிரவில் ஒரு கூடையில் சுமந்து போகிறார்.

நல்ல மழை. குழந்தை நனைகிறதே என்ற கவலை. யமுனையிலோ பெருவெள்ளம். வசுதேவர் வெள்ளத்தில் இறங்கி அக்கரைக்குக் போய்விட வேண்டும். முடியுமா? முடியும். பகவான் நினைத்தால் முடியும். பரம் பொருள் துணை இருந்தால் எதுவுமே சாத்தியம். யமுனையிடம் செல்வதற்கு வழி விடு என்று மனம் உருகிப் பிரார்த்திக்கிறார்.

13. பாம்பு பிடித்த குடை

எது நடந்தாலும் நடக்கட்டும் என்று காலை நதியில் மெல்ல வைக்கிறார். அங்கு ஒரு பாம்பு நீந்தி வந்து படம் எடுக்கிறது. அடுத்த நிமிடம் அது குழந்தையின் முகத்தில் மழைத்துளி சிதறாமல் குடை விரிக்கிறது.

சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம்
பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு

பாம்புக்கு வடமொழியில் ‘சக்ஷுச்சரவஸ்’ என்றும், தென்மொழியில் ‘கட்செவி’ என்றும் பெயர். கண்ணைக் கொண்டே காண்பதும் கேட்பதும் செய்தல் பாம்புகளின் இயல்பாம். ஆகவே, செவிகள் தனிப்படத்தெரியாது. ஒரு இந்திரியத்தாலே பல இந்திரியங்களின் காரியங்களை நிர்வகிப்பதுபோல, ஒரு திருமேனியைக் கொண்டே பல கைங்கரியங்களும் செய்பவன் திருவனந்தாழ்வான்.

14. வழி கிடைத்துவிட்டது

இப்பொழுது ஒரு பிரச்னை தீர்ந்துவிட்டது. ஆனால், யமுனை வெள்ளம் வற்றவில்லை. வசுதேவர் “ஆனது ஆகட்டும்’’ என்று மெல்ல முன்னேறுகிறார். முழங்கால் அளவு, மார்பளவு, கழுத்தளவு என வெள்ளம் ஏறிக் கொண்டே போகிறது. குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்கிறது. “ஓ, குழந்தை வெள்ளத்தைக் கண்டு அஞ்சுகிறானோ, இல்லை வெள்ளத்தை அச்சப்படுத்துகிறானோ’’ மெல்ல மெல்ல ஆர்வத்தோடு ஏறிய யமுனை, குழந்தையின் திருவடியை தொட்டதும் ஜென்ம சாபல்யம் அடைந்தது போல் மகிழ்ந்து அப்படியே குனிகிறாள். இப்போது வெள்ளம் முழங்கால் அளவுதான். ஆம்..! வசுதேவருக்கு இப்போது வழி கிடைத்துவிட்டது. வசுதேவருக்கு மட்டுமல்ல வையகத்துக்கே வழிகிடைத்துவிட்டது.

15. நிலா.. நிலா.. ஓடிவா..

யசோதை இடுப்பில் குழந்தை கண்ணன். மேலே நிலா. என்னமோ தெரியவில்லை. இன்று இந்த பிள்ளை சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. இடது கை சுட்டு விரலால் நிலாவை காட்டி என்னவோ சொல்கிறது. குழந்தையின் மொழி தாய்க்கு தானே புரியும். யசோதைக்கும் புரிகிறது. யார் ஒருவருக்கு குழந்தையின் ஒவ்வொரு சிணுங்கல்களுக்கும் அசைவிற்கும் அர்த்தம் தெரிகிறதோ அவளே உண்மையான தாய். யார் ஒருவருக்கு தெய்வத்தின் திருவுள்ளம் மனதில் படுகிறதோ அவரே உண்மையான பக்தன். யசோதைக்கு, கண்ணனின் எண்ணம் தெரிகிறது. சந்திரனை இந்த குழந்தை அழைக்கிறது. அருகில் வா.. என்கிறது. யசோதை நிலாவிடம் கேட்கிறாள். “இதோ பார் நிலவே, உன் முகத்தைவிட என் மகன் அழகு. நீ அருகில் வந்துவிடு. அவன் எத்தனை நேரம் உன்னை கைநீட்டி அழைப்பான். கைவலிக்காதா. சிறு குழந்தை என்று நினைக்காதே. அவன் பெருமையை மஹாபலியிடம் போய் கேள்’’

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா

16. பிறந்தவுடன் தாய் சொல் கேட்டவன்

ஆழ்வார்கள் மட்டுமல்ல, கவிஞர்கள் எல்லோருக்குமே கண்ணனிடம் அலாதிப் பிரியம். அவர்கள் கிருஷ்ணாவதாரத்தை ஒரு படி தூக்கியே பேசுவார்கள். அதற்குச் சொல்லும் காரணங்களில் ஒன்று. பிறந்தவுடன் தாய் சொல்லைக் கேட்டவன் கண்ணன் என்பது. ராமன், 12 வயதுக்கு மேல் பிதுர் வாக்கிய பரிபாலனம் செய்தான். விஸ்வாமித்திர மகரிஷியுடன் காட்டுக்கு போய்வா என்று தந்தை தசரதன் சொன்னவுடன், சரி என்றான்.

14 ஆண்டுகள் காட்டுக்கு சென்று தவம் செய் என்று சொன்னபோதும், சரி என்றான், ராமன். ஆனால், கண்ணனோ பிறந்த உடனே தாயின் வார்த்தையைக் கேட்டானாம். `தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷனம் சதுர்புஜம் ஷங்க கதாத்யுதாயம்’’ என்று பாகவதம் சொல்லுகின்றது. பிறக்கும்போதே சங்கு சக்கரங்களுடன் நான்கு கைகளுடன் அவதரித்தானாம். இந்தப் பிரபாவத்தை பார்த்த தாய் தேவகி, “ உப சம்ஸர விஷ்வாந் மன்நதோ ரூபம் அலௌகிகிகம்,’’ என்று “இந்த உலகத்தில் நீ இப்படிப் பிறக்கலாமா, அது பொருந்துமா? நீ சாதாரண மனிதர்கள் போல இரண்டு கைகளுடன் இருக்க வேண்டும்’’ என்று பிரார்த்தித்தவுடன், தன்னுடைய நான்கு கரங்களை மறைத்துக் கொண்டு சாதாரண குழந்தை போல் காட்சி அளித்தான். பிறந்த உடனே தாய் சொல் கேட்டவன் என்பது கண்ணனுக்குப் பெருமை.

17. கண்ணன் பிறந்தவுடன் என்ன நடந்தது?

கண்ணன் பிறந்த உடன் எத்தனையோ ஆச்சரியங்கள் நடந்தன. வானம் ஒளி பெற்று இருந்தது. பல நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாக ஜொலித்தன. உலகெங்கும் உன்னதமான சகுனங்கள் தோன்றின. தேவகி வசுதேவருடைய கால் விலங்குகள் தானாகவே தெறித்து விழுந்தன. பெற்றோர்களுடைய வினைக்கட்டுக்களை ஒரு நல்ல பிள்ளை பிறந்தால் அழித்துவிடும் என்பதற்கு கண்ணனுடைய அவதாரம் உதாரணம்.

ஆனால், சாதுசனங்களை துன்புறுத்தும் கம்சன், சிசுபாலன் முதலியவர்களுடைய நிலைவேறு மாதிரியாக இருந்ததாம். அவர்களுடைய கிரீடங்கள் எல்லாம் கீழே விழுந்து நொறுங்கியது. திடீரென்று தங்களுடைய வலிமை குறைவதாக உணர்ந்தார்களாம். அவர்கள் வீட்டுப் பெண்களின் காதுக் குழைகள் கீழே அறுந்து விழுந்ததாம். அதாவது, அவர்கள் கணவன் மார்களுக்கு காலன் என கண்ணன் பிறந்துவிட்டான் என்பதை அறிவிக்கும் தீயசகுனங்கள் தோன்றியதாம். திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக்
கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்

18. கிருஷ்ண அவதாரத்தில் எது விசேஷம்?

ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணனுடைய பால லீலைகள் எல்லாமே சிறப்புதான். ஆனால், எந்த நிகழ்ச்சி ஆழ்வார்களை மயக்கியது என்ற ஒரு விவாதம் உண்டு. ஒவ்வொன்றுமே ஒரு தத்துவார்த்த நிகழ்வுதான். பூதனையிடம் பால் குடித்தது, சகடா சூரனை உதைத்து அழித்தது, தேனுகாசூரனை ஒழித்தது, கேசி என்கிற குதிரை முகம்கொண்ட அசுரனை முடித்தது, காளிங்கனின் தலைமீது நர்த்தனம் ஆடியது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் கண்ணன், வெண்ணெய் திருடி விட்டான் என்று சொல்லி, ஒரு பழைய உரலில் வலிமை இல்லாத குறுங்கயிற்றால் யசோதை கட்ட, உலகத்தை எல்லாம் கட்டியவன், ஒரு தாயின் முயற்சிக்கும் செயலுக்கும் கட்டுப்பட்டு நின்றானே, அதைத்தான் கொண்டாடுகிறார்கள்.

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறருக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம்! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே

இப்படியும் ஒரு எளிமையா (சௌலப்யம்) என்று நினைத்து நினைத்து மூவாறு மாதம் அதாவது 18 மாதம் நம்மாழ்வார் மயங்கியே இருந்தாராம்.

19. தாமோதரன்

கண்ணனுக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. அதில் சிறப்பான நாமம் தாமோதரன். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணங்குடி (நாகப்பட்டினம் திருவாரூர் சாலையில் உள்ள ஊர்) பெருமாளுக்கு தாமோதரப் பெருமாள் என்று பெயர். தாம்பு என்றால் கயிறு. உதரம் என்றால் வயிறு. தன்னுடைய அம்மா யசோதை கட்டிய குறுங்கயிற்றால் வயிற்றில் தழும்பாகவே மாற்றிக்கொண்டவன். அதனால் கிருஷ்ணாவதாரம் முழுவதும் இடுப்பில் உள்ள வஸ்திரத்தை இறங்கிவிடாமல் (தன்னுடைய இடுப்புத் தழும்பை யாரும் பார்த்துவிடாமல்) கெட்டியாக பிடித்துக் கொள்வான் என்று சுவாரசியமாகச் சொல்லுவார்கள். இதை மாயனை என்ற பாசுரத்திலே தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை என்கின்ற வரியால், தாயின் வயிற்றுக்கு பட்டம் கட்டியவன் என்ற பெருமையை கண்ணனுக்கு கொடுக்கிறாள் ஆண்டாள்.

20. ஏன் வெண்ணெய் திருடினான்?

பால் அப்படியே வைத்தால் கெட்டுவிடும். அது போல்தான் நாமும். கொஞ்சம் சூடு படுத்தினால் பால் கொஞ்ச நேரம் தாங்கும். அதை தயிர் ஆக்கினால் இன்னும் சில நாள் தாங்கும். இந்தத் தயிரில் தண்ணீர் கலந்தால் மறுபடி மோராகிவிடும். தண்ணீர் கலக்காது மத்தினால் கடைந்தால் வெண்ணெய் திரண்டு வரும். வெண்ணெய் பல நாட்கள் கெடாது. இதற்கு முன், பாலில் தண்ணீரும், தயிரில் தண்ணீரும் கலக்கும் நிலை இருந்தது. ஆனால், வெண்ணெய்யோடு தண்ணீர் கலக்காது. மிதக்கும். கெட்டுப் போகும் வாய்ப்பு உள்ள இந்த நிலவுலகில் (கர்ம பூமி) பஞ்சபூதங்களால் ஆன சரீரத்தைப் பெற்ற நாம், சரீர ஆன்ம சம்பந்தம் உணர்ந்து ஆன்மாவை வெண்ணெய் என்கின்ற வஸ்துவாக பக்குவப்படுத்திவிட்டால், பகவான் தனக்கு உரியதாக ஏற்றுக் கொள்கின்றான். அதற்கு அடையாளமாகத்தான் வெண்ணெய் படைக்கிறோம்.

21. நாம் பகவானை கட்ட முடியுமா?

நிச்சயமாக கட்ட முடியும் என்கிறார் திருமழிசை ஆழ்வார். யசோதை கண்ணனைக் கட்டியது போல் நாமும் கட்டலாம். அதற்கு நமக்குத் தேவையானது நம்பிக்கையும் அசஞ்சலமான பக்தியும். பக்தியில் கொஞ்சம் சஞ்சலம் இருந்தாலும், கட்ட வேண்டிய கயிறு அறுந்து விடுவது போல் வீழ்ந்து விடும். அதனால் பக்தியை தைலதாரையோடு ஒப்பிடுவார்கள். யோகம் என்பார்கள். எட்டோடு இரண்டு சேர்த்து கட்டலாம் என்று ஒரு கணக்கு போல் சொல்லுகின்றார் ஆழ்வார்.

எட்டோடு இரண்டு சேர்த்தால் பத்து வரும். அந்த பத்துதான் பக்தி. இதற்கு மட்டும்தான் பகவான் கட்டுப்படுவான். இந்த பக்தியில்தான் சகாதேவன் கண்ணனைக் கட்டினான். இதை மிக அழகாக ஒரு பாடலில் கவியரசு கண்ணதாசன் பாடி இருக்கிறார். பக்தியை மலராகவும் பாசத்தை நூலாகவும் சத்தியத்தை மலர் சரமாகவும் அவர் உருவகப்படுத்தி ஓர் சரணம் பாடி இருக்கின்றார்.

பக்தி என்னும் சிறு மலர் எடுத்து
பாசம் என்னும் ஒரு நூல் எடுத்து
சத்தியம் என்னும் சரம் தொடுத்து – நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு
– என்பது அந்தப் பாடல்.

22.ஆண்டாள் கட்டிய மாலை

ஆண்டாள் பூமாலையையும் கட்டினாள். பாமாலையையும் கட்டினாள். இரண்டு மாலைகளைக் கொண்டு கண்ணனையும் கட்டினாள். அதுவும் பலவந்தமாகக் கட்டினாள். அந்தக் கட்டலுக்கு கண்ணன் கட்டுப்பட்டான். பொதுவாக கண்ணனுக்கு மாலைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதை போல தோத்திரம் செய்தாலும் பிடிக்கும். இந்த இரண்டாலும் இறைவன் மகிழ்வான் என்பது சாஸ்திரம்.

வராகப் பெருமாள் இந்த ரகசியத்தை சொல்லிக் கொடுக்கின்றார். அதைச் செயல்படுத்தவே பூமாதேவி ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். கண்ணனாக அவதாரம் எடுத்த வராக பெருமாளை, பூமாலையாலும், பாமாலையாலும் கட்டினாள். இப்படியும் கட்ட முடியும் என்று நமக்குச் சொன்னாள். இதை ஒரு அழகான வடமொழி சுலோகத்தில் சொல்லுகின்றார், பராசர பாட்டர்.

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய

23 எப்போது மோட்சம் கிடைக்கும்?

ஒருவருக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அவருடைய பாவமும் போக வேண்டும். புண்ணியமும் போக வேண்டும். காரணம், பாவம் நரகவாசத்தையும், புண்ணியம் சொர்க்கவாசத்தையும் தரும். இதை இரண்டையும் அனுபவித்துத் தான் கழிக்க வேண்டும். அதனால்தான் வள்ளுவரும் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டுஎன்றார்.

பகவான் கண்ணன் தன்னை வணங்குபவர்களுக்கு இந்த இரு வினைகளையும் ஒரே சமயத்தில் நீக்கி அருளுகிறார் என்பதை விளக்குகிறது சித்தயந்தி என்கிற பக்தையின் கதை. இக்கதையை ஆசாரியர்கள் தங்கள் உரையில் பல இடங்களில் எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள்.

24 யார் இந்த சித்தயந்தி?

சித்தயந்தி என்பவள் ஆயர்பாடியில் புதிதாகத் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்தவள். மிகச்சிறந்த கிருஷ்ண பக்தை. கண்ணனின் குழல் இசைக்கு மயங்கியவள். ஆனால், அதெல்லாம் திருமணம் ஆகிற வரைக்கும்தான். திருமணமாகி புகுந்து வீட்டுக்கு வந்தபின் மாமனார் மாமியார் கெடுபிடி அதிகம். அதனால், அவளால் கண்ணனைப் பார்க்கவோ, கண்ணனுடைய இசையைக் கேட்கவோ முடியவில்லை. இந்த வருத்தம் அவளுக்கு நெஞ்சில் இருந்து கொண்டே இருந்தது.

இந்த வருத்தத்தை அனுபவிக்க அனுபவிக்க அவளுடைய பாவங்கள் குறைந்து கொண்டே வந்தன. ஒரு நாள் எங்கிருந்தோ காற்றில் வேணுகானம் தவழ்ந்து வந்தது. அது அவளுடைய காதில் விழுந்தது. அவள் மனம் பாகாய் உருகியது. “அடடா… அடடா… இதல்லவோ இசை’’. செவி மடலில் புகுந்து, சிந்தையில் கலந்து, விழிகளை நனைத்து, வேதனையை விரட்டி, உள்ளத்தில் உற்சாகமூட்டும் அந்த இசைக்கு இணை ஏது?

25 கொல்லைப் புறத்தில் அவள் பார்த்த அதிசயம்

கொல்லைப்புறம் வருகிறாள் அங்கே
அவள் பார்த்த அதிசயம் வியக்க வைக்கிறது.
கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே

கண்ணபிரான் குழலூதும்போது அறிவுக்கு தேன் சொரியும் மரங்கள், பூக்களை சொரியும் மரங்கள்.. என பல மரங்கள். கண்ணபிரான் குழலூதிக் கொண்டு நிற்கும் பக்கங்கள் பல நோக்கி திரும்புமாம். “எமக்கருள் செய்ய வேணுமென்று அஞ்சலி பண்ணுமாம். கெஞ்சுமாம். எது…? நாம் உணர்ச்சியற்றது என்று நினைக்கும் மரங்கள்..! அப்படியானால் உணர்ச்சியுடைய சித்தயந்தியின் நிலை….?

26.குழலூதும் கண்ணன் முகம்

அவன் முகம் பார்க்க வேண்டும் என்று ஆயர் பெண்கள் எல்லாம் ஓடுவதைப் பார்க்கிறாள். அவன் இசையில் மயங்கும் செவி உணர்வு ஒரு புறம் இருக்க… கச்சேரியை நேரில் கேட்டால் எப்படி இருக்கும்? அவன் இசையை ரசிப்பது போலவே, இசைப்பதையும் ரசிக்க வேண்டுமே… ஆஹா.. சின்னஞ் சிறுவிரல்கள் தடவுகிறதாம்.. புருவங்கள் மேலே ஏறி இறங்குகிறதாம். கன்னங்கள் குழி விழுந்தும் மேடாகியும் ஜாலம் புரிகிறதாம். கண்களிலோ வைரம் ஜொலிக்கிறதாம். இதழ்களிலோ புன்னகை அரும்புகிறதாம். இதழ்கள் நெளிந்தும் மேலே ஏறியும் விரிந்தும் சுருங்கியும் பல்வேறு வடிவங்களில் தோற்றமளிக்கிறதாம். அதுவரை மேய்ச்சலில் இருந்த மாடுகள், கண்ணனை சுற்றி காலடியில் காதுகளை ஆட்ட மறந்து மெய்மறந்து கிடக்கிறதாம். பறவைகள் மயங்கியதாம்.

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.

27.கண்ணனின் காலடியில் சித்தயந்தி

சித்தயந்தியின் நெஞ்சில் எண்ணங்கள் ஓடுகிறது. கண்ணனைப் பார்க்க ஓடுகின்ற பெண்களின் சிலர் வாஞ்சையோடு கூப்பிடுகிறார்கள்.
“நீ வரவில்லையா?’’

“மாமா மாமி வீட்டில் இருக்கிறார்கள்’’
“எங்கள் வீட்டிலும்தான் இருக்கிறார்கள் அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? அவர்கள் இருந்தால் என்ன? நீ பாட்டுக்கு வா… அவர்கள் கொஞ்ச நேரம் கத்துவார்கள்… நாங்கள் வரவில்லையா… கண்ணன் பிறந்த போது நாமும் பிறந்து, அவன் இசையைக் கேட்கும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறோம். இனி ஒரு ஜென்மம் கிடைக்குமா? இந்த பாக்கியத்தை இழக்கலாமா? வா.. வா…’’

சித்தயந்திக்குப் போக வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது. ஆனால், அவளுடைய மாமனும் மாமியும் வாசலில் உட்கார்ந்து “எங்கே போகிறாய்? காலை உடைத்து விடுவோம். உள்ளே போ..’’ என்று விரட்ட, அழுகிறாள். அந்த அழுகையில் அவள் பாவமெல்லாம் கரைகிறது. ஆனால், அவள் செய்த புண்ணிய பலனாய் குழலோசை காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. ஒரே நேரத்தில் பாவ புண்ணிய பலன்கள் கரைய, இருந்த இடத்திலேயே மயங்கிவிழுகிறாள். ஓர் ஜோதி மெல்ல நகர்ந்து கண்ணனின் காலடியில் சரண் புகுகிறது. இவளை `சித்தயந்தி’ என்று சொன்ன வைணவ ஆச்சாரியார்கள் இதே நிலையில் கண்ணனை நினைத்து நினைத்து மயங்கிய நம்மாழ்வாரை, `தீர்க்க சித்தயந்தி’ என்று அழைக்கிறார்கள்.

28. பொய்கள் உரைப்பான்

கண்ணனை பொய் சொல்பவன் என்று ஆழ்வார்களும் ஆச்சாரியார்களும் பாடுகின்றார்கள். இவன் பொய் உரைக்கிறான் என்று தெரிந்தும் இவனை என் மனம் விரும்புகிறதே என்றும் பாடுகின்றார்கள். அதற்கு ஒரு காட்சியை சொல்கிறார். தன்னுடைய அதிமானுஷ ஸ்தவத்தில் கூரத்தாழ்வான்.

யந் நாம நாத! நவநீதம் அசூகரஸ்த்வம்
தச்சாதநாய யதி தே மதிரா விராஸித்
கிம் முக்த !திக் தமமுனா கரபல்லவம் தே
காத்ரே ப்ரம்ருஜ்ய நிரகா: கில நிர் விசங்க:

இரண்டு பானைகள். ஒரு பானையில் இருந்த வெண்ணையை அவசரமாக வாய்க்குள் அடைத்துக் கொண்டான். விழுங்கவே இல்லை. இப்பொழுது இன்னொரு பானையில் கையை நுழைத்து பெரிய உருண்டையாக கையில் எடுத்துக் கொண்டான். இப்பொழுது கோபிகை வந்துவிட்டாள். அவளிடத்தில், தான் திருடவில்லை என்று சொல்ல வேண்டும்.

29. யாராவது நம்புவார்களா?

ஆனால், வாயிலும் கையிலும் வெண்ணை. கையில் இருக்கின்ற வெண்ணெய் எல்லாம் தலையிலும் காதிலும் மார்பிலும் பூசிக் கொண்டு, அவளுக்கு எதிரில் போய் “நான் வெண்ணை திருடவில்லை. வெண்ணை திருட இங்கு வரவில்லை’’ என்றானாம். இதை அந்த கோபி நம்புவாளா? இதைக் கூரத்தாழ்வான் மேலே உள்ள ஸ்லோகத்தில் பாடுகிறார். “உலகமெல்லாம் படைத்தவனே, பிரபுவே, உனக்கு ஏன் இந்த திருட்டுத் தொழில்? திருட வேண்டிய அவசியம் உனக்கு என்ன வந்தது? சர்வ லோகத்துக்கும் நீ நாதன். நீ ஏன் திருடப் போறாய்? சரி, திருடப் போக வேண்டும் என்றால் அந்த திருட்டுத் தொழிலை நன்றாக தெரிந்து கொண்டு போக வேண்டும். இப்படி யாரும் எசகு பிசகாக மாட்டிக் கொண்டு, திருடவில்லை என்று சொன்னால் யாராவது நம்புவார்களா’’ என்று ஸ்வாரஸ்யமாகக் கேட்கிறார்.

30.எப்படிக் கொண்டாடுவது?

கோகுலாஷ்டமி திருநாளில் கண்ணனை நினைத்து சேவிக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் இரவு வரை பூஜை செய்பவர்களுக்கு, வருடம் முழுக்க ஏகாதசி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன் கிடைக்கும். கண்ணன் நம் வீட்டுக்குள் நுழைவதற்கு அடையாளமாக அவனுடைய திருவடிச் சுவடுகளை வீட்டு வாசலில் இருந்து பூஜை வரை இழை கோலமாகப் போடலாம். வெண்ணெய், பால், தயிர், நெய், நாவல்பழம், சீடை, முறுக்கு, அவல் போன்ற பொருள்களையும் நிவேதனம் செய்யலாம் குறைந்தபட்சம்.

கரார விந்தேன பதார விந்தம் முகார விந்தே விநிவே சயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

(தாமரைப் போன்ற கைகளால் தாமரை போன்ற கால்களை முகத்தில் வைத்த வண்ணம் ஆலிலையில் துயில் கொண்டுள்ள பாலனான கண்ணனை நான் தியானம் செய்கின்றேன். என்ற ஸ்லோகத்தை நாம் பாராயணம் செய்யலாம். அப்போது, கண்ணன் நம் உள்ளத்தில் வந்து குடியேறுவான்)

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் appeared first on Dinakaran.

Tags : Kannan ,Saffron ,Pearls ,Krishna ,Preamble Kannan ,
× RELATED கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட...