×

சென்னையில் ஆயுஷ் ஆய்வு கூட்டம் அனைத்திந்திய சித்தா நிலையத்தை திருச்சியில் அமைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை: சென்னையில் நடந்த ஆயுஷ் ஆய்வு கூட்டத்தில் திருச்சியில் சித்த மருத்துவத்திற்காக ஓர் அனைத்து இந்திய சித்தா நிலையத்தை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்தார்.தேசிய ஆயுஷ் துறை சார்பாக 5 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் பிராந்திய ஆய்வு கூட்டம் மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தலைமை வகித்தார்.

ஆயுஷ் மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் முன்ஞ்பாரா மகேந்திரபாய், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவாலிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:
டெல்லியில் அனைத்து இந்திய ஆயுர்வேத நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை போல் பாரம்பரிய மருத்துவத்தில் நமது மாநில மக்களுக்கு உயர்தரமான சிகிச்சை வசதி ஏற்படுத்த தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் சித்த மருத்துவத்திற்காக ஓர் “அனைத்து இந்திய சித்தா நிலையம்” ஒன்றிய அரசு ஏற்படுத்தவும், மதுரை திருமங்கலத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசினர் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை திருப்பரங்குன்றம் தாலுகாவில் புதுப்பட்டி கிராமத்தில் மறுநிர்மாணம் செய்ய தேவையான நிதியுதவியையும், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள அரசினர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கு தேவையான நிதியுதவியையும், சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவத்தின் புற சிகிச்சை முறையான வர்மம் சிகிச்சை முறைக்கான சிறப்பு மையம் அமைக்க நிதியுதவியையும் தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் பெற்றுத்தர வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி மற்றும் ஆயுஷ் ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசும்போது, ‘‘தற்போது யூனியன் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, கேரளா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி மொத்தம் 1,518 (AHWC) மையங்கள் செயல்படுவதாகவும், மேலும் நாட்டில் 12,500 ஆயுஷ் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை (AHWCS) அமைப்பதற்கும், தமிழ்நாடு, ஆந்திராவை உள்ளடக்கிய தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ₹719 கோடி நிதியை வெளியிடுவதற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’’ என்றார்.

The post சென்னையில் ஆயுஷ் ஆய்வு கூட்டம் அனைத்திந்திய சித்தா நிலையத்தை திருச்சியில் அமைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : AYUSH ,Chennai ,All India Siddha Center ,Trichy ,Minister ,M.Subramanian ,Union Minister ,All India Siddha Center for Siddha Medicine ,M. Subramanian ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு 2,364 மாணவர்கள் எழுதினர்