×

திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இரவு நேர தூய்மைப்பணி துவக்கம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் இரவு நேர தூய்மைப்பணி திட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், சதுரங்கப்பட்டினம் சாலை, மீன் மார்க்கெட், பஜார் வீதி, மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகள் காய்கறி மற்றும் பழக்கடை, துணிக்கடை, கறி கடை மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை அதிகமுள்ள பகுதிகளாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட மக்கள் முதல் ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகள் அடங்கிய சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வரை தங்களுக்கு தேவையான பொருட்களை இங்கு வந்து தான் வாங்கி செல்கின்றனர். இந்த வகையில், தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடமாக இப்பகுதி விளங்கி வருகிறது. மேலும், சிவ தலங்களில் உலக பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு வெளிநாட்டினர் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் தினமும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இதனால், பஜார் வீதி மற்றும் பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் பெருமளவு குவிகிறது. பகல் நேரத்தில் தினமும் பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை அகற்றினாலும், தொடர்ந்து அதிக அளவு குப்பைகள் சேர்கிறது. இந்த குப்பைகளை முழுமையாக சுத்தம் செய்யும் நோக்கத்துடனும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும், பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வண்ணமும் குப்பைகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற நோக்கில், ‘இரவு நேர தூய்மைப்பணி’ என்ற திட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் துவக்கியுள்ளார்.

அதன்படி இப்பணிக்காக தொகுப்பூதிய பணியாளர்கள் 12 பேரை இரு பிரிவுகளாக பிரித்து பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதி, சதுரங்கப்பட்டினம் சாலை பகுதிக்கு ஒரு பிரிவினரையும், அடிவார பகுதி, கானகோயில் பேட்டை, மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகளுக்கு ஒரு பிரிவினர் என்ற அடிப்படையில் இரவு நேரங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு முழுமையாக அனைத்து குப்பைகளையும் அகற்றி வருகின்றனர். நள்ளிரவு வரை நடைபெறும் இந்த தூய்மை பணியை பேரூராட்சி தலைவர் யுவராஜ் உடனிருந்து பார்வையிட்டு வருகிறார்.

The post திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இரவு நேர தூய்மைப்பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Thirukkakukunram ,Thirukkalukkunram ,President ,Thirukkalukunram ,Dinakaran ,
× RELATED சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு...