×

சாமியார் உருவப்பொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டில் நடந்தது அமைச்சர் உதயநிதி தலைக்கு ₹10 கோடி அறிவித்த

குடியாத்தம், செப்.11: அமைச்சர் உதயநிதி தலைக்கு ₹10 கோடி அறிவித்த சாமியார் உருவபொம்மையை குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டில் எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடந்த மாநாட்டில் சனாதனம் தொடர்பாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு இந்திய அளவிலும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அமைச்சர் உதயநிதி மீது டெல்லி, பீகார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், சனாதனம் பற்றிய தனது கருத்து சரியானதுதான் என்றும், அதில் இப்போதும் உறுதியாக இருப்பதாகவும், அதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள தயார் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பாஜகவினர் தனது பேச்சை திரித்து பொய் செய்தி பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆனாலும், அமைச்சர் உதயநிதி மீதான வார்த்தை தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், ‘அமைச்சர் உதயநிதி தலைக்கு ₹10 கோடி’ என அயோத்தியை சேர்ந்த சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர திமுக சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் திமுகவினர் சனாதனத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா உருவ பொம்மையை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர், திமுகவினர் குடியாத்தம் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்து, அங்கிருந்து பேரணியாக திமுக கொடியுடன் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் வரை சென்றனர். இதில் நடுப்பேட்டை அரசு பள்ளி பிடிஏ தலைவர் அமர்நாத், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் ஒன்றிய குழு தலைவர் சத்யாநந்தம் தலைமையில் சாமியார் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் நகர செயலாளர் ஆலியார் ஜுபேர் அஹ்மத் தலைமையில், திமுகவினர் சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post சாமியார் உருவப்பொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டில் நடந்தது அமைச்சர் உதயநிதி தலைக்கு ₹10 கோடி அறிவித்த appeared first on Dinakaran.

Tags : DMK ,Peranambat ,Minister ,Udayanidhi ,Kudiatham ,Kudiatham, Peranambat ,Udhayanidhi ,
× RELATED (வேலூர்) 450 கிலோ வெல்லம் பதுக்கிய 2 பேர்...