×

ஆலந்தூர் சமுதாய நலவாழ்வு மையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், 160வது வார்டு, சவுரி தெருவில் நகர்ப்புற சமுதாய நலவாழ்வு மையம் உள்ளது. முகலிவாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து கர்ப்பிணிகள் கர்ப்பகால சேவைகள் மற்றும் பிரசவ கால சேவைகளுக்காக இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் 250 முதல் 300 புறநோயாளிகளுக்கு பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 கலர் டாப்லர் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் மற்றும் 1 மல்டிபாரா மானிட்டர் ஆகிய மருத்துவ உபகரணங்கள் இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இந்த உபகரணங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உபகரணங்களை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, இதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், நிலைக்குழு தலைவர் கோ.சாந்தகுமாரி, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் இணை பொதுமேலாளர் சத்யநாராயணன், துணை பொது மேலாளர் ஆர்.ராஜசேகர பாண்டி, முதுநிலை மேலாளர் பிரசாந்த், மண்டலக்குழுத் தலைவர் என்.சந்திரன், கவுன்சிலர்கள் டி.எம்.பிருந்தா ஸ்ரீ, சாலமோன், துர்கா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலந்தூர் சமுதாய நலவாழ்வு மையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Alandur Community Health Centre ,Chennai ,Urban Community Welfare Center ,Sauri Street ,160th Ward ,Alandur Zone ,Chennai Corporation ,Mughalivakkam ,Minister ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...