×

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளித் தேரோட்ட விழா:அமைச்சர்கள் பங்கேற்பு; பக்தர்கள் உற்சாகம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இந்த கோயிலுக்கு கடந்த 1960ம் ஆண்டு வெள்ளித் தேர் செய்யப்பட்டு முருகர், வள்ளி, தெய்வானையுடன் உற்சவத்தின் போது வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வந்தார். திருப்படி திருவிழா மற்றும் பல்வேறு விழாக்களில் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி தேர் வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு கொடுத்தார். இந்தநிலையில் கடந்த 2013ம் ஆண்டு வெள்ளி தேரின் பாகங்கள் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ளி தேரை பழுதுபார்க்காமல் கிடப்பில் போட்டனர்.

இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளித் தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் பக்தர்கள் தவித்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிய வெள்ளி தேர் செய்யும் பணியை துவக்கி வைத்தார் ரூபாய் 19 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மரம் மற்றும் 3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 529 கிலோ வெள்ளி கொண்டு தேர் செய்யப்பட்டது.

இதையடுத்து வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. நேற்று மாலை புதிய வெள்ளி தேர் அலங்கரிக்கப்பட்டு முருகர், வள்ளி, தெய்வானையுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு வெள்ளி தேர் பவனியை தொடங்கி வைத்து வெள்ளி தேரை தேர் வீதி வரை இழுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி சுக புத்திரா, தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி திருத்தணி, வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி வட்டாட்சியர் மதன், நகரமன்ற துணைத் தலைவர் சாமிராஜ், நகர திமுக செயலாளர் வினோத்குமார் உள்பட பல கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தரன், அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, மு.நாகன் இணை ஆணையர் ரமணி மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி 204 ஊழியர்களுக்கு 2 கோடியே 35 லட்சத்து 53 ஆயிரத்து 333 ரூபாய்க்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

 

The post கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளித் தேரோட்ட விழா:அமைச்சர்கள் பங்கேற்பு; பக்தர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Silver Chariot Ceremony ,Tiruthani Murugan Temple ,Thiruthani ,Thiruthani Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு