×

நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி 2 போட்டிகளில் எங்களது செயல்பாடு திருப்தியாக இல்லை: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

பல்லெகலே: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பல்லெகலேவில் நேற்று நடந்த 5வது லீக் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா-நேபாளம் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த நேபாளம் 48.2 ஓவரில் 230 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58, சோம்பால் கமி 49 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா, சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இந்தியா களம் இறங்கிய நிலையில் 3வது ஓவரில் மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் 23 ஓவரில் 145 ரன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இதில் ரோகித்சர்மா 74 (59 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), சுப்மன் கில் 67 ரன் (62 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுக்க 20.1 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதன் மூலம் பி பிரிவில் 2வது இடம்பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. நேபாளம் 2 போட்டியிலும் தோற்று வெளியேறியது.

ரோகித்சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் அளித்த பேட்டி: “பேட்டிங்கை துவங்கும் பொழுது கொஞ்சம் பதற்றமாக இருந்தது. பின்பு நிலைமை சரியானதும் அணியை வெற்றி பெற வைக்க கொண்டு செல்ல முடிவு செய்தேன். நான் லெக் சைடில் தட்டிய பந்தை சிக்ஸருக்கு அடிக்க நினைக்கவில்லை, ஷாட் பைன் லெக் திசையில் சிப் செய்யவே நினைத்தேன். ஆனால் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் அது சிக்ஸராக மாறியது. நாங்கள் இங்கு வந்தபொழுதே எங்களுடைய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணி எப்படி இருக்கும் என்று தெரியும். ஒன்று இரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம் அவ்வளவுதான். விளையாடிய இந்த இரண்டு போட்டிகளை வைத்து நாங்கள் அதிகம் எதையும் பார்க்க முடியாது. அதிர்ஷ்டவசமாக முதல் போட்டியில் பேட்டிங் செய்யவும் 2வது போட்டியில் பந்துவீசவும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த 2 போட்டியின் செயல்பாடுகள் எங்களுடைய சிறந்தது கிடையாது. ஆனால் எங்களுடைய அணியில் சில வீரர்கள் சில மாதங்களுக்கு பிறகு விளையாட வந்திருக்கிறார்கள். முதல் போட்டி அழுத்தத்தின் கீழ் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் சிறப்பாக பேட் செய்தார்கள். இந்தப் போட்டியில் எங்கள் பந்துவீச்சு ஓகே. ஆனால் ஃபீல்டிங் மிக மோசம்” என்றார். இன்று மாலை 3 மணிக்கு லாகூரில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பி பிரிவில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதில் ஆப்கன் அதிக ரன்வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறலாம்.10ம் தேதி இந்தியா-பாக். மோதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. இதில் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா தலா 3 புள்ளிகளுடன் முதல் இரு இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பி பிரிவில் வங்கதேசம் நுழைந்துள்ள நிலையில் மற்ற ஒரு அணி இன்று இரவு தெரிந்துவிடும். சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். அந்த வகையில் வரும் 10ம்தேதி கொழும்பில் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

 

The post நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி 2 போட்டிகளில் எங்களது செயல்பாடு திருப்தியாக இல்லை: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rokitsarma ,India ,Pallekale ,16th Asian Cup Cricket Series ,Pakistan ,Sri Lanka ,Pallekaleh ,Nepal ,Super ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை