×

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தொடர்ச்சியாக 11 இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடர்ந்து 11 இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு நலமுடன் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சார்ந்த அஜித்குமார் என்பவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதை தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடர்ந்து 11வது இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு, அறுவை செய்து கொண்ட நபர் வீடு திரும்பினார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழுவினரை பாராட்டும் வகையிலான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குடி பகுதியில் இருந்து அஜித்குமார் (27), வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அங்கே அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் அங்கு பணியிலிருந்து இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

57 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலை விபத்தில் படுகாயமடைந்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், மூளைச்சாவு அடைந்ததால் அவரிடத்திடமிருந்து இதயம் பெற்று, அஜித்குமாருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, நேற்று அவர் இல்லம் திரும்பினார். இவருடன் சேர்த்து 11 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் இங்கு வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதனை ஊக்கப்படுத்துகின்ற வகையிலும், எதிர்காலத்தில் கூடுதலாக அறுவை சிகிச்சை செய்ய வைக்கும் நிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.

வரும் 23ம் தேதி உறுப்புதான கொடை தினம் மிகச் சிறந்த வகையில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. என்ஓடிடிஓ என்கிற தேசிய உறுப்பு தான திட்ட டெல்லி அமைப்பு இந்திய மாநிலங்களில் 5 பகுதிகளாக பிரித்திருக்கிறது. இதில், என்ஓடிடிஓ தெற்கு என்பது தமிழ்நாட்டை மையமாக கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் நடைபெறும் உறுப்புதான கொடை தின நிகழ்ச்சியில், என்ஓடிடிஓ தெற்கு உறுப்பினர்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர் பெருமக்களை பங்கேற்க அழைத்துள்ளோம். இந்நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பான முறையில் நடத்திட திட்டமிட்டுள்ளோம். மேலும் பன்றி காய்ச்சல் பரவல் தமிழ்நாட்டில் அதிகரிக்கவில்லை. மருத்துவமனைகளில் பரிசோதனைகள் தொடங்க பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ரோபோடிக் சிகிச்சை
இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத புதிய வசதியாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், ரூ.34 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரோபோடிக் அமைக்கப்பட்டுள்ளது. அது தொடங்கிய நாள்முதல் இன்று வரை 170 அறுவை சிகிச்சைகள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்டிருக்கிறது.

2000 பேர் வரை அதிகரிப்பு
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையை பொறுத்தவரை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் வரை தினம்தோறும் வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 500ல் இருந்து 700 வரை இருந்தது. இன்றைக்கு இந்த எண்ணிக்கை 2000 வரை உயர்ந்திருக்கிறது. 4 மடங்கு கூடுதலாக இன்றைக்கு பொதுமக்கள் இந்த மருத்துவமனையை நாடி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் வரை உள்நோயாளிகளின் எண்ணிக்கை 250 என்கின்ற எண்ணிக்கையில் இருந்தது. தற்போது 500 வரை உள்நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது.

The post ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தொடர்ச்சியாக 11 இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Omanturar Government Pannoku Hospital ,Minister ,M. Subramanian ,Chennai ,M.Subramanian ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...