சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து கூறுவதா என ஆர்எஸ்எஸ், பாஜவுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கும் போது பேசிய கருத்துகளை திரித்தும் சிதைத்தும் ஆர்எஸ்எஸ், பாஜ பரிவாரம் விஷமப் பிரசாரம் செய்து வருவதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் துவங்கி பாஜவின் நட்டா, அண்ணாமலை வரை ஒரே குரலில் பொய்யுரைக்கின்றனர்.மதச்சார்பற்ற அரசியலை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பாஜவினரின் அழிவு சித்தாந்தத்தை முறியடிப்போம்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து தெரிவித்த கருத்து, பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருவதுதான். கடந்த காலங்களில் வாய் மூடி கடந்து சென்ற பாஜவும், “இந்துத்துவா” கும்பலும் தற்போது வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதித்து வருகின்றன. பாஜவும், சங்பரிவார் கும்பலும் உதயநிதி ஸ்டாலின் இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு மூட்டை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி, தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை வரை சமய நம்பிக்கை கொண்டவர்களுக்கு மதவெறியூட்டும் மலிவான செயலில் இறங்கியுள்ளது. வட மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த, புனைவுக் குற்றச்சாட்டுகளை வழக்குகளாக பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் தனி நபர் மையப்பட்ட சர்வாதிகார கட்டமைப்பை ஏற்படுத்தும் வஞ்சகச் செயலில் ஈடுபட்டு வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்): சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசுகையில் சனாதனத்தை ஒழிப்பது இன்றியமையாத தேவை, எப்படி தொற்று நோய்களை ஒழித்தாக வேண்டுமோ அப்படி இதையும் ஒழித்தாக வேண்டும் என்று அவர் பேசியதை இன்றைக்கு அகில இந்திய அளவில் ஒரு பிரச்னையாக, உள்துறை அமைச்சர் போன்றவர்களும் பேசும் நிலை உருவாகியுள்ளது. சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியல் கோட்பாட்டை எதிர்த்து பேசுவது, அதை ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது போன்ற திரிபு வாதத்தை பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக உள்ளது.
நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ தலைவர்): சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. அதனை ஒழிக்க வேண்டும் என்கிற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தினை, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரான இனஒழிப்பு அழைப்பாக அவதூறு பரப்பும் பாஜவினரின் செயல் கண்டிக்கத்தக்கது. எவ்வித மிரட்டல்களுக்கும் பணியாமல் அமைச்சர் உதயநிதி கருத்தில் உறுதியாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து கூறுவதா? ஆர்.எஸ்.எஸ்., பாஜவுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.
