×

பெரு நிறுவனங்களின் கடன் தள்ளுபடியை விட தேர்தல் செலவு குறைவுதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: ‘பெரு நிறுவனங்களின் கடன் தள்ளுபடியை விட தேர்தல் செலவு குறைவுதான். எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை’ என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை கொண்டு வருவது தொடர்பாக ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகள், மாநிலங்களவையின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் என்பது போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். அரசியலமைப்பு சட்டம் 368 (2)ன் படி இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 3ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவது தொடர்பாக அமைக்கப்பட்ட சுதர்சன் நாச்சியப்பன் கமிட்டியும், அதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சட்ட ஆணையமும் தங்களது அறிக்கையில் விதிமுறைகளை தெரிவித்துள்ளனர். இந்த முறையை கொண்டு வர 5 ஆண்டுகளுக்கு முன்பே விதிமுறைகளை அமல்படுத்தியிருக்க வேண்டும். எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டு வர சாத்தியமில்லை. மக்களவையில் உறுப்பினர்கள் வெளிநடப்பின்போது இந்த மசோதாவை நிறைவேற்றினாலும், மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாது. மக்களவை தேர்தலுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

பிரதமருக்காக ரூ.8 ஆயிரத்து 450 கோடியில் விமானம் வாங்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ரூ.7 ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்ற நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்கின்றனர். இது சாமானிய, ஏழை, எளிய மக்களின் வங்கிப் பணமாகும். கடந்த 5, 6 ஆண்டுகளில் ரூ.13 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி ஒன்றிய அரசு கடனாக பெற்றுள்ளது. 7 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துள்ளனர். இவர்கள் ஆட்சியில் என்ன உருவாக்கினார்கள் என்பதை கண்டுபிடித்து தான் கூற வேண்டும். எனவே தேர்தல் நடத்துவதற்கு ரூ.50 ஆயிரம் கோடி என்பது பெரிய தொகை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சனாதனம் குறிப்பிட்ட நபர்களையே கோயிலுக்குள் அனுமதிக்கிறது
சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ‘சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக கூறியுள்ளார். சனாதனம் என்பது எல்லோருக்கும் உள்ளது அல்ல. உயர் ஜாதியினருக்கானதாகும். எனவே சனாதனக் கொள்கையை எதிர்க்கிறோம். இந்த அரசு எல்லோருக்குமான அரசு. சனாதனத்தின்படி ஒரு குறிப்பிட்ட நபர்கள் தான் கோயிலுக்குள் செல்ல முடியும். ஆளுநர் சனாதனத்தின்படி இந்தியா வளர்ச்சியடைந்திருக்கிறது என்று கூறினார். அதற்குப் பதில் தான் இது’ என்றார்.

The post பெரு நிறுவனங்களின் கடன் தள்ளுபடியை விட தேர்தல் செலவு குறைவுதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Peru ,Speaker ,Paddy ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...