×

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணை மானிய திட்ட புத்தாக்க பயிற்சி

 

செங்கல்பட்டு, செப். 4: உலக வங்கி நிதி உதவியுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் புனித தோமையார் மலை ஆகிய 3 வட்டாரங்களில் உள்ள 119 கிராம ஊராட்சிகளில் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், தொழில் முனைவுகளுக்கான நிதி வழி வகைகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின், சிறப்பு அம்சமான இணை மானியத் திட்டம் குறித்த பயிற்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது. வங்கியாளர்கள், வட்டார மற்றும் மாவட்ட பணிக்குழு உறுப்பினர்களுக்கு மகளிர் திட்ட இயக்குநர் மணி தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், இணை மானியத் திட்டம் விளக்கக் கையேடு பிரதியினையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல மேலாளர் சிக்ரிலால், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினர்.

வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கான காரணத்தையும் விளக்கிப் பயிற்சியளித்தார். இப்பயிற்சியில், இணை மானியத் திட்டம் வழிமுறைகள் குறித்தும், தொழில் முனைவோர்களுக்கு திட்டத்தின் பயன் கிடைக்க விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இறுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின், தொழில் நிதி வல்லுநர் சுந்தரேசன் நன்றி தெரிவித்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட அணியினர் பயிற்சி வழங்கினர்.
பயிற்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் தில்லை நடராஜன் மற்றும் சதீஷ் ஆகியோர் மேற்கொண்டனர். இப்பயிற்சியில் வங்கியாளர்கள், வட்டாரப் பணியாளர்கள் மற்றும் தொழில் சார் சமூக வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இணை மானிய திட்ட புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Live It Up ,Chengalpattu ,Tiruporur ,Thirukkalukkunram ,St. Thomaiyar ,Chengalpattu district ,World Bank ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...