×

இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பத்தில் இடிந்து விழும்நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

செய்யூர், செப். 4: இடைக்கழிநாடு பேரூராட்சி ஆலம்பரைகுப்பத்தில் இடிந்து விழும்நிலையில் உள்ள பயனற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சி 14வது வார்டில் ஆலம்பரைகுப்பம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில் இயங்கும் இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த குடிநீர் விநியோகிக்கும் தொட்டி நாளடைவில் பழுதான காரணத்தால் கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதோடு வேறொரு பகுதியில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, பழுதான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால், அதற்கான நடவடிக்கை அதிகாரிகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது, பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால், குடிநீர் தேக்க தொட்டி எப்போது சரிந்து விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், பள்ளி அருகிலேயே இந்த குடிநீர் தேக்க தொட்டி அமைந்துள்ளதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சப்பட்டு வருகின்றனர். எனவே, பெரும் விபரீதங்கள் நேரிடுவதற்கு முன் இந்த பழுதான குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

The post இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பத்தில் இடிந்து விழும்நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Alamparaikuppam ,Adhikali Nadu ,Sayyur ,Athikakalinadu Municipality ,Alamparaikuppa ,Athikakalinadu Alambaraikuppam ,Dinakaran ,
× RELATED கடப்பாக்கம் – ஆலம்பரைகுப்பம் இடையே...