×

ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் கூட்டம் குறைந்ததன் எதிரொலி காசிமேட்டில் மீன்களின் விலை கடும் வீழ்ச்சி: வஞ்சிரம் ரூ.650, சங்கரா ரூ.300க்கு விற்பனை

சென்னை: காசிமேட்டில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விடுமுறை தினமாக இருப்பதால், பெரும்பாலோன தம்பதியினர் குழந்தைகளுடன் வீடுகளில் இருப்பது வழக்கம். இதனால், தாங்கள் நினைத்த அசைவ உணவு வகைகளை வீடுகளில் வகை வகையாக சமைப்பது வழக்கம். இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன், சிக்கன், மீன் விற்பனை, மற்ற வார நாட்களை விட அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில் மீன்கள் பிரஷ்ஷாக கிடைக்கும் என்பதால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் காசிமேட்டில் அதிகாலையிலேயே மக்கள், வியாபாரிகள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஞாயிற்றுக்கிழயைன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தை விட மீன் வரத்தும் அதிகமாக இருந்தது. இதனால், மீன் விலை குறைந்து காணப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் போட்டி போட்டு அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர். இதற்கு மாறாக நேற்று காசிமேடு துறைமுகத்தில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

அதே நேரத்தில் 80 முதல் 90 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. கூட்டம் குறைவாக இருந்ததால் மீன்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து இருந்தது. கடந்த வாரம் வஞ்சிரம் மீன் ரூ.900 முதல் 1000 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று வஞ்சிரம் மீன் ரூ.650 என்று விலை குறைந்து காணப்பட்டது. சங்கரா பெரியது ரூ.300, கடமா ரூ.250, இறால் ரூ.450, நண்டு ரூ.300, தேங்காய் பாறை ரூ.450, கருப்பு வவ்வால் ரூ.350 என்ற விலையிலும் விற்பனையானது. விலை குறைந்திருந்த போதிலும், மீன்கள் விற்காததால் மீனவர்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது.

The post ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் கூட்டம் குறைந்ததன் எதிரொலி காசிமேட்டில் மீன்களின் விலை கடும் வீழ்ச்சி: வஞ்சிரம் ரூ.650, சங்கரா ரூ.300க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Casimat ,Vanchiram ,Shankara ,CHENNAI ,Kasimet ,Vanjiram ,Dinakaran ,
× RELATED முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்;...