×

தர்மபுரி-வத்தல்மலை சாலை ₹4 கோடியில் விரிவாக்கம்

தர்மபுரி, செப்.4: தர்மபுரி இலக்கியம்பட்டியில் இருந்து, வத்தல்மலை செல்லும் சாலை ₹4 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இதில், 4 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது வத்தல்மலைக்கு, தர்மபுரியில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, இலக்கியம்பட்டி இபி ஆபீஸ், ராமன்நகர், ஏமகுட்டியூர், முக்கல்நாயக்கன்பட்டி மற்றும் வத்தல்மலை அடிவாரம் வரை தொடர்ச்சியாக செல்லும் சாலையை நேருநகர், ராமன்நகர், ஏமகுட்டியூர், உங்காரனஅள்ளி, வெங்கட்டம்பட்டி, மாதேமங்கலம், தம்மணம்பட்டி, மிட்டாரெட்டிஅள்ளி, தின்னஅள்ளி, எட்டிமரத்துப்பட்டி, நூலஅள்ளி, முக்கல்நாயக்கனஅள்ளி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இலக்கியம்பட்டி இபி ஆபீஸ் முதல் முக்கல்நாயக்கன்பட்டி வரை ஒருவழிச்சாலையாகத் தான் உள்ளது.

இந்த சாலையின் வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், ஒரே நேரத்தில் இரு கனரக வாகனங்கள் வந்தால், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட்டு செல்ல சாலை அகலமாக இல்லை. குறுகலான ஒருவழிச்சாலை என்பதால், சாலையோர கழிவுநீர் கால்வாய்க்குள் வாகனங்கள் செல்வதும், சரிந்து விழுவதுமாக உள்ளது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், இதனை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. இதையடுத்து, ஒருவழிச்சாலையை, இருவழிச் சாலையாக மாற்ற ₹4 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 3.75 மீட்டர் அகலத்தில் இருந்த சாலை, தற்போது 5.30 மீட்டர் அகலமாக விரிவுபடுத்தப்படுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன், பூமிபூஜையுடன் பணிகள் தொடங்கியது. சாலையின் இடதுபுறம் மட்டும், தற்போது விரிவாக்கப் பணிகள் நடக்கிறது.

இலக்கியம்பட்டி இபி ஆபீஸ் முதல் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை, முதல்கட்டமாக சாலை அகலப்படுத்தப்படுகிறது. ராமன்நகர் தடுப்பணை அருகே, 4 இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணி, முடியும் தருவாயில் உள்ளது. தற்போது தடுப்பணையின் பகுதியில் சாலைக்காக கான்கிரீட் தடுப்பு சுவர் எழுப்பப்படுகிறது. முதல்கட்ட பணிகள் முடிந்த பின்னர், விடுபட்ட இடங்களில் இருந்து சாலை பணிகள் தொடங்கும். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்புள்ள ஒருவழிச்சாலையை தான், 90 கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கிறது. இதற்கு ஒரே தீர்வு ஒருவழிச் சாலையை இருவழிச்சாலையாக அகலப்படுத்துவது தான்,’ என்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி-கலெக்டர் அலுவலகம் அருகே இலக்கியம்பட்டி இபி ஆபீஸ், ராமன்நகர் வழியாக வத்தல்மலைக்கு செல்லும் சாலை, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ₹4 கோடி மதிப்பீட்டில் 5.30 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படுகிறது. விபத்துக்கள் மற்றும் நெரிசலை தவிர்க்கவே, இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. 4 இடத்தில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு கூடுதல் நிதி பெற்று, விடுபட்ட இடத்தில் இருந்து சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில், வத்தல்மலைக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில், 7.30 மீட்டர் அகலத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்படும்,’ என்றனர்.

 

The post தர்மபுரி-வத்தல்மலை சாலை ₹4 கோடியில் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri-Vatthalmalai ,Dharmapuri ,Dharmapuri Litarambatti ,Vathalmalai ,Dharmapuri-Vathamalai ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு