×

இலை தலைவரை தாமரையின் மவுன்டன் வறுத்தெடுக்கும் பின்னணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘சேலம்காரரை தினமும் ‘டென்ஷன் மோடில்’ வைத்துள்ள தாமரை தலைவரை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரை தலைவர் ‘மவுன்டன்’ தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கூட்டணியில் இருந்தே குழிபறிக்கும் வேலை எல்லாம் ‘மவுன்டன்’ செய்து வருகிறார் என்று ஏகத்துக்கும் கொந்தளித்து போய் உள்ளாராம் சேலத்து இலை தலைவர். குறிப்பாக தன் தலைமையில் தூங்கா நகரில் நடந்த மாநாட்டில் பத்து சதவீதம்பேர் தான் கட்சிக்காரர்கள். 90 சதவீதம் பேர் கரன்சியை கொடுத்து கொண்டு வரப்பட்டவர்கள். இதனால் யாருக்கும் நன்மை கிடையாதுன்னு, சொல்லி சேலத்துக்காரரை சீண்டிட்டாராம் ‘மவுன்டன்’ தலைவர். இதனை கேள்விப்பட்ட சேலம்காரர் ரொம்பவே டென்ஷனாகி தன் நெருங்கிய வட்டத்தில் வார்த்தையால் மவுன்டனை வறுத்தெடுத்துட்டாராம். ம்… எங்களிடம் உங்கள் கோபத்தை காட்டுங்க, ‘மவுன்டனை’ எதிர்த்து அறிக்கை விட கூட பயப்படுகிறார்.. இந்நிலையில் எங்களை எதற்கு ‘மவுன்டனை எதிர்த்து அறிக்கை விட சொல்கிறார்… எங்களை வம்புல மாட்டிவிட பார்க்கிறார் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் மலைக்கு எதிராக வாய் திறக்க மறுத்திட்டாங்களாம். அதை தட்டி கேட்க வேண்டிய சேலம்காரர் மவுனம் காக்கிறாராம். ஏன்னு கேட்டால், தேனிக்காரரின் சிவில் வழக்கால் இலைகட்சி முழுமையா இன்னும் கைக்கு வரல. இதைவச்சே ஒன்றிய கட்சி மிரட்டி சேலத்துக்காரரை தனது கைப்பாவையா வச்சிருக்கு. அதே நேரத்துல சேலத்துக்காரர் அக்கட்சிக்கு ஒற்றை இலக்கத்துலத்தான் சீட் ஒதுக்கப்போறார். இதனை தெரிஞ்சுகிட்ட தாமரை தலைமை, ‘மவுன்டனை’ விட்டு சேலத்துக்காரரின் வாயை கிளறிப்பார்க்க நினைக்கிறாங்க. வாயை திறக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறையை கண்முன் காட்டும் திட்டமும் தாமரையிடம் இருக்காம். இதனை தெரிஞ்சிக்கிட்ட சேலத்துக்காரரோ பல்லை இறுகக்கடித்துக் கொண்டு வாயை திறக்காமல் இருக்காராம். தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இப்படியே இருந்திடனுமுன்னு திட்டம் போட்டு இருக்காராம். அதன்பிறகு தான் யார் என்பதை காட்டுவாருன்னு அவரது நெருங்கிய அடிப்பொடிகள் சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ ஒன்றிய அரசுடன் மோதுவதை தடுக்கும் தங்கை பவர்புல் பெண்மணியான இசையின் பேச்சை தட்டிவிட்டு, ஒன்றிய அரசுடன் மோத தயாராகிவிட்ட புல்லட்சாமி பற்றி ெசால்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என புல்லட்சாமி அறிவித்தார். இதற்காக அமைச்சரவை கூடி முடிவெடித்து, துணை நிலை ஆளுநர் இசையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைச்சாங்களாம். மாநில அரசின் இடங்களில் இருந்துதான், இந்த இட ஒதுக்கீடு வழங்க இருக்கிறது.
இதனால், ஏற்கனவே உள்ள குறுக்கு, நெடுக்குமான இட ஒதுக்கீடுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இதனை பவர்புல் பெண்மணியான இசையின் ஒப்புதலுடன் நிறைவேற்றலாம் என காத்திருந்தாராம் புல்லட்சாமி. கோப்பு வந்தவுடன் இசை, நேரடியாக அதை உள்துறைக்கு அனுப்பிட்டாராம். ஏற்கனவே இருந்த போலீஸ் சர்வீசில் இருந்த பவர்புல் பெண்மணி, கோப்பு கருத்தில் வேறுபாடு இருப்பதாக கூறி திருப்பி அனுப்பிட்டாராம். ஏற்கனவே பிரச்னை உள்ளதால், 10 சதவீத இட ஒதுக்கீடு கோப்பினை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறி இசை அனுப்பி வைத்திருக்கிறாராம். ஆனால் வேண்டுமென்றே கோப்பினை அனுப்பி வைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கம்பு சுத்துகிறார்களாம். மத்தியில், மாநிலத்தில் கூட்டணியில் இருக்கிறோம் கோப்புக்கு உடனே அனுமதி கிடைத்துவிடும் என நம்பியிருந்த புல்லட்சாமியை, காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதடி என ஒன்றிய அரசு பாட்டு படும் நிலைக்கு தள்ளிவிட்டதாம். இதனால் கடுப்பான புல்லட்சாமி ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மாணவர் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். பதறிபோன தமிழிசை அவசரம் வேண்டாம், ஒன்றிய அரசு நிச்சயம் அனுமதி கொடுக்கும் எனக்கூறி சமாதானப்படுத்தியுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசு பணத்தை, வங்கியில் உள்ள தன் சொந்த கணக்கிற்கு மாற்றினாராமே ஆபீசர்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஆறு கொண்ட பகுதியில கடந்த இலைக்கட்சி ஆட்சி காலத்துல, அக்ரி ஆர்டிகல்சர் ஆபிசராக ஜெ என்ற எழுத்துல தொடங்குற பெயர் கொண்டவரு பணியாற்றி வந்தாரு. அப்ேபா, பொன்னான ஏரியாவுல, பாடி, மலை, குப்பம் என்று முடியுற பெயர் கொண்ட ஊராட்சிகள்ல மீன் குட்டை மற்றும் ஆர்டிகல்சர் சார்புல பல திட்டங்கள் செயல்படுத்த, கவர்மென்ட் பண்டும் ஒதுக்கப்பட்டிருக்கு. ஆனா, இந்த திட்டங்கள் எதுவும் செய்யலையாம். பல எல்களை சொந்த கணக்குல வரவு வெச்சிகிட்டதாக புகார் குரல் ஒலிக்கத்ெதாடங்கியிருக்குது. அப்போது நடைமுறைப்படுத்துன திட்டங்கள் எல்லாமே, ஏட்டலவுலத்தான் இருக்குறதாக சொல்றாங்க. அந்த அதிகாரியும் டிரான்ஸ்பர் ஆகிட்டாராம். இந்த விவகாரத்தை விசாரிச்சா… பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும்னு அந்த ஏரியாவுல ஜனங்க பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோயம்பேடு கட்சிக்காரரால், கடன்காரர்களாக யார் சுற்றி திரியறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்துல கேப்டன் கட்சி மாவட்ட செயலாளர்கள் சைலண்டா இருப்பதால கீழ் மட்ட நிர்வாகிங்க, என்ன செய்றதுன்னு தெரியாம புலம்பி வர்றாங்க. போன எலக்க்ஷன்ல கட்சி வேட்பாளருங்ககிட்ட மாவட்ட செயலாளருங்க தலைமையில இருந்து விட்டமின் ‘ப’ வரும், அதுவரையில நீங்க செலவு பண்ணுங்கன்னு சொன்னாங்களாம்.. இத நம்பி வேட்பாளருங்க கடன் வாங்கியும், சொந்த பணத்தையும் லட்சக்கணக்குல செலவு பண்ணுனாங்களாம்.. ஆனால், இதுவரையில தலைமையில இருந்து எதுவும் வரலயாம். இப்போ நாடாளுமன்ற தேர்தல் வரப்போவுது. இதுக்கும் கடன வாங்க வேண்டிய நிலையில விட்டு விட்டு வாங்களோன்னு வேட்பாளர் ஆசையில இருக்குறவங்க பயப்படறாங்களாம். இதபத்தி மாவட்டங்கள்கிட்ட கேட்டா, நாங்க என்ன செய்யறது. தலைமைகிட்ட இருந்து எந்த சிக்னலும் கிடைக்கல, எங்கள கண்டுக்கிறதே இல்ல. எங்கள என்ன செய்ய சொல்றீங்கன்னு கடுப்படிக்கிறாங்களாம். இதனால கீழ் மட்டத்துல இருக்குற நிர்வாகிங்க, பைசா இல்லாமல் கட்சி கொடி ஏற்ற முடியாமலும், சாக்லெட் வாங்கி தர முடியாமலும் தொண்டர்கள் முன்னிலையில் தலையை தொங்க போட்டிட்டு இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை தலைவரை தாமரையின் மவுன்டன் வறுத்தெடுக்கும் பின்னணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf ,Lotus Mountain ,Lotus ,Salemkar ,Peter ,Leaf Leaf ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...