×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6430 கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, விநாடிக்கு 9000 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்படுவதாலும், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலையும் நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.

இதனால், அங்குள்ள மெயின்அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில், செந்நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி காவிரியில் பரிசல் இயக்குவதற்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று மாலை முதல் தடை விதித்துள்ளது. இன்று 2வது நாளாக தடை நீடிக்கிறது.அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 5018 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6430 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 48.48 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 48.24 அடியானது. நீர்இருப்பு 16.72 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6430 கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Okanagan ,Mettur ,Tamil Nadu ,Kabini ,Krishnarajasagar dams ,Karnataka, Tamil Nadu ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!