×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை: மாமல்லபுரத்தில் சுனாமி வந்துவிட்டதென நினைத்து பொதுமக்கள் ஓட்டம்

செங்கல்பட்டு, செப்.3: செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் பொத்தேரி, கூடுவாஞ்சேரியில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டார். மாமல்லபுரம் ஒத்திகை நிகழ்ச்சியை கண்ட பொதுமக்கள் சுனாமி வந்துவிட்டது என நினைத்து, அலறியடித்து ஓடினர். இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 6 கடலோர மாவட்டங்களில் புயல் அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி ஏரி, வண்டலூர் வட்டம் கூடுவாஞ்சேரி ஏரி, தாம்பரம் வட்டம் முடிச்சூர் ஏரி, திருப்போரூர் வட்டம் படூர் ஏரி, திருக்கழுக்குன்றம் வட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் என 5 இடங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை ஆகியோரால் நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சியில் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த ஒத்திகையானது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி நடத்தப்பட்டது. இதில் பொத்தேரி ஏரி மற்றும் கூடுவாஞ்சேரி ஏரிகளின் அருகில் புயல், வெள்ளம் மற்றும் மழைக் காலங்களில் நீரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை செய்து காண்பித்ததை கெலெக்டர் ஆர்.ராகுல்நாத் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஒத்திகை பயிற்சியின்போது புயல், வெள்ளம், மழை போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்காட்டினர். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வெள்ள பேரிடர் காலங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் எளிமையான பொருட்களான தெர்மாகோல், கார் டயர் மற்றும் காலி வாட்டர் பாட்டில்கள், வால்வ் மூடிய சிலிண்டர் ஆகியவற்றைக்கொண்டு தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது, நீர்நிலைகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக எவ்வாறு மீட்பது என செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் இப்பயிற்சிகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை உதவி ஆய்வாளர் மனிஷ் மற்றும் தலைமை காவலர் ஆகியோரால் செயல்முறை விளக்கம் அளித்து காண்பிக்கப்பட்டது.
இதில் மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து அவசர கால ஊர்தி 108ல் ஏற்றி வைப்பது தொடர்பான மாதிரி செயல்விளக்கம் பொது சுகாதாரத் துறையினர் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியினை சார் ஆட்சியர் லட்சுமிபதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, கால்நடை பராமரிப்பு துறை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்
மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் புஷ்பலதா, துணை தாசில்தார் சையது அலி, வருவாய் ஆய்வாளர் ரகு, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாமல்லபுரம் தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில், மாமல்லபுரம் மற்றும் செய்யூர் தீயணைப்பு வீரர்கள் 15க்கும் மேற்பட்டோர் இணைந்து மழை, வெள்ளம் மற்றும் கடலில் சுனாமி ஏற்பட்டு கடல் அலையில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, அவர்களுக்கு எப்படி மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் அனுப்பி வைப்பார்களோ அந்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டினர். முன்னதாக, தீயணைப்பு வீரர்கள் கடற்கரையில் இருந்தவர்களை உடனே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தனர்.
அப்போது, அங்கு கடற்கரையில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள், உண்மையிலேயே சுனாமி வந்து விட்டது என நினைத்து அலறியடித்து கொண்டு, உயிர் பயத்துடன் ஓடினர். பின்னர், பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி என தெரிந்ததும் அவர்கள் நிம்மதியடைந்தனர்.

அமைச்சர் ஆய்வு
புயல் அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடந்தது. சென்னையில் இருந்தவாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகளை ஆய்வு செய்தார்.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் பகுதியில் திரவுபதி அம்மன் கோயில் குளம் உள்ளது. இங்கு, பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் நகராட்சி ஆணையாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், பேரிடர் கால கண்காணிப்பாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு பேரிடர் கால ஒத்திகையை தொடங்கி வைத்தனர். இதில், மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிப்பவர்களை படகுமூலம் எப்படி காப்பாற்றுவது? தீயணைப்பு துறையினர் வர முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் தாங்கள் வீட்டில் உபயோகித்து வரும் பொருட்களை எப்பெடி பயன்படுத்துவது, விபத்தில் சிக்கியவர்களையும், தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும் எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து செய்முறை மூலம் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். இதில், வட்டாரப் போக்குவரத்து துறை ஆய்வாளர் அமிதாபானு, மறைமலை நகர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கார்த்திகேயன், மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், கால்நடை டாக்டர் சீனிவாசன் தலைமையில் எராளமானோர் கலந்துகொண்டனர். இந்த பேரிடர் ஒத்திகை நடந்தபோது, செங்கல்பட்டு கலெகட்ர் ராகுல்நாத் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர், வரவுள்ள பருவமழையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்புடன் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை: மாமல்லபுரத்தில் சுனாமி வந்துவிட்டதென நினைத்து பொதுமக்கள் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Disaster preparedness ,Chengalpattu district ,Mamallapuram ,Chengalpattu ,Potheri ,Guduvancheri ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...