×

வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சீரமைப்பு

சிவகிரி, செப்.3: வாசுதேவநல்லூரில் உள்ள அரசு வட்டார மருத்துவமனையில் அடிப்படைவசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து அடிப்படை வசதிகள் சீரமைக்கும் பணி நடந்தது. வாசுதேவநல்லூரில் தலைமை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினந்தோறும் சுமார் 300க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இம்மருத்துவமனையில் பராமரிப்பின்றி கழிப்பறை இருந்ததுடன், மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர்மண்டி காணப்பட்டது. குடிநீர் தொட்டிகள் இருந்தும் அவற்றில் தண்ணீர் நிரப்பாமல் அவை பயனற்ற நிலையில் இருந்தது. குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 31ம் தேதி செய்தி வெளியானது.

இதனையடுத்து வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனை வளாக பகுதி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பராமரிப்பின்றி இருந்த கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சீரமைக்கப்பட்டதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். அடிப்படை வசதிகள் சீரமைப்பு நடவடிக்கைக்கு காரணமான தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Vasudevanallur Government Hospital ,Sivagiri ,Dinakaran ,Vasudevanallur Government Regional Hospital ,
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்