×

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் ஈசா மைய ஆவணங்கள் சமர்ப்பிப்பு: நிர்வாகிகள் விளக்கம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஈசா யோகா மையம் தொடர்பான ஆவணங்களை நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் சமர்ப்பித்துவிட்டதாக ஈசா யோகா மையம் தரப்பில் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையில் ஈசா அமைப்பு நிர்வாகிகள் தினேஷ் ராஜா, ஸ்ரீமுகா, தமிழ் மாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் 2017ல் ஆதியோகி சிவன் சிலை நிறுவப்பட்டது. எங்களுடைய தரப்பில் 2016ம் ஆண்டு ஆதியோகி சிலை அமைப்பதற்கு தேவையான அனுமதி கோரி விண்ணப்பித்தோம்.

மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் சிலை அமைக்க எங்களுக்கு 2016 செப்டம்பரில் அனுமதி வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு சிலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு அமைப்பு உயர் நீதிமன்றத்தில் ஈசாவிற்கு எதிராக வழக்கு தொடுத்தது. மேலும், அந்த வழக்கு கடந்த மாதம் முடித்து வைக்கப்பட்டது. எனவே, எவ்வித அனுமதியும் இல்லாமல் ஆதியோகி சிலை கட்டப்பட்டுள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

அதன்படி, சிலை வைப்பதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம்தான் உள்ளது. டிடிசிபி-யின் அனுமதி வரம்பிற்குள் இது வராது. அந்தவகையில் தான் டிடிசிபி தரப்பில் ஈசா யோகா மையம் தொடர்பான ஆவணங்கள் இல்லை என நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஈசா தொடர்பான எங்களிடம் உள்ள ஆவணங்களை நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் சமர்ப்பித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் ஈசா மைய ஆவணங்கள் சமர்ப்பிப்பு: நிர்வாகிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : ISA ,Planning ,Madras High Court ,Chennai ,ISA Yoga Center ,Planning Department ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...