×

விரைவில் தொகுதி பங்கீடு முடியும் அக்.2ல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி நிகழ்ச்சிகள்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: இந்தியா கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு முடிந்து விடும். காந்தி ஜெயந்தி தினமான அக்.2 முதல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் முதல் கூட்டம் நடந்தது. அதை தொடர்ந்து பெங்களூருவில் 2வது கூட்டம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆக.31 மற்றும் செப்.1ம் தேதியில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் 3வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் பீகார் திரும்பிய முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பானது அவர்கள் முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்து சிந்திக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது எதிர்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு திணறுகின்றது. எனவே தான் ஒன்றிய அரசு இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்தியா கூட்டணியானது ஆளும் பாஜவை உலுக்கியுள்ளது. இது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு ஒன்றிய அரசை கட்டாயப்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு முடிந்து விடும்.

அதன்பின்னர் நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி தினத்தில் நிகழ்ச்சிகள் நடத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை தொடங்கவில்லை. அதுபற்றி ஒன்றிய அரசு இன்னும் எதுவும் பேசவில்லை. ஆனால் நமது விதிகளின்படி, இந்த கணக்கெடுப்பு நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அரசிற்கு மற்ற எல்லா விஷயங்களுக்கும் நேரம் இருக்கிறது. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு நேரம் இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முக்கியமான பிரச்னைகளை வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எழுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post விரைவில் தொகுதி பங்கீடு முடியும் அக்.2ல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி நிகழ்ச்சிகள்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Patna ,Gandhi Jayanti day ,All India Alliance ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...