×

திருவனந்தபுரத்தில் கண்கவர் பேரணி; ஓணம் வார நிறைவு விழாவில் 3000 கலைஞர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: ஓணம் வார விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் நகரில் நேற்று அலங்கார ஊர்திகளுடன் கண்கவர் பேரணி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அரசு சுற்றுலாத் துறை சார்பில் ஓணம் வார விழா நடத்தப்படும். இவ்வருட ஓணம் வார விழா கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திருவனந்தபுரம் நகரில் மட்டும் 32 இடங்களில் கலை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஓணம் வார விழா நிறைவை முன்னிட்டு திருவனந்தபுரம் நகரில் நேற்று மாலை கண்கவர் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியை கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் தொடங்கி வைத்தார். கேரள அரசின் காவல்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் இதில் கலந்து கொண்டன. சந்திரயான் 3 மற்றும் சமீபத்தில் கேரளா, தமிழ்நாடு மக்களிடையே பீதியை ஏற்படுத்திய அரிசிக் கொம்பன் மாதிரியும் இந்தப் பேரணியில் இடம்பெற்றிருந்தது.

கதகளி, திருவாதிரை உள்பட கேரளாவின் பல்வேறு பாரம்பரிய கலைகளும், தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலைகளும் இந்தப் பேரணியில் இடம்பெற்றன. திருவனந்தபுரம் தவிர கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்தப் பேரணியை பார்ப்பதற்காக குவிந்திருந்தனர்.

The post திருவனந்தபுரத்தில் கண்கவர் பேரணி; ஓணம் வார நிறைவு விழாவில் 3000 கலைஞர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Onam week ,Tamil Nadu ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?