சேலம், செப்.2: சேலத்தில் பாஜ பிரமுகர் நிலத்தை அபகரித்ததாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் பெண் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தை அடுத்துள்ள சின்னவீராணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சின்னபொண்ணு (50), விவசாயி. இவர் நேற்று மதியம் தனது இளைய மகன் லோகேஷ் (18) என்பவருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவுவாயில் பகுதிக்கு வந்த சின்னபொண்ணு, திடீரென கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் எஸ்ஐ சுப்பிரமணி தலைமையிலான போலீசார் அவரை தடுத்து, உடலில் தண்ணீர் ஊற்றி அவரை ஆசுவாசப்படுத்தினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் விவசாய நிலம் சின்னவீராணத்தில் உள்ளது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இதில், ஒன்னே முக்கால் சென்ட் நிலத்தை பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் ஒருவர், அபகரித்துக் கொண்டார். அவர் மீது போலீசில் புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால், அந்த நிலத்தை மீட்டு தரக்கேட்டு மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன். அந்த நிலத்தை மீட்டு தராவிட்டால், சாவதை தவிர வேறு வழியில்லை என்பதால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன், என்றார். இதையடுத்து தீக்குளிக்க முயன்ற சின்னபொண்ணு, அவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரையும் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீ சார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜ பிரமுகர் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கூறி பெண் விவசாயி தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் விவசாயி தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.
