×

கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு * குடிநீர், கழிப்பறை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை * அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு புகழ்பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலை

திருவண்ணாமலை, செப்.2: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை புகழ்பெற்ற ஆன்மிக நகராகும். அண்ணாமலையார் கோயிலை தரிசிக்கவும், கிரிவலம் சென்று வழிபடவும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் கிரிவலம் சென்ற நிலைமாறி, அனைத்து நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். எனவே, கிரிவலப்பாதையை மேம்படுத்துவதும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை அதிகரிப்பதும் அவசியமாகியிருக்கிறது. அதையொட்டி, ஒருங்கிணைந்த கிரிவலப்பாதை மேம்பாடு திட்டம் தயாரிக்கப்பட்டு, படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, கிரிவலப்பாைதயை விரிவுபடுத்துதல், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை அதிக இடங்களில் ஏற்படுத்துதல், பக்தர்களுக்கான ஓய்வு அறைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது.

இந்நிலையில், கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ெதாடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் இரவு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கிரிவலப்பாதையில் தற்போதுள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவும், தண்ணீர் வசதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், கிரிவலப்பாதையில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை கூடுதலாக 5 இடங்களில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள உத்தேச இடங்களை பார்வையிட்டார். மேலும், பாதுகாக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி பக்தர்களுக்கு கிடைக்க கூடுதலான இடங்களில் குளிர்ந்த குடிநீர் தொட்டிகளை அமைக்க உத்தரவிட்டார்.

மேலும், 14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் செல்லும் பக்தர்கள், இடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்துச்செல்ல வசதியாக குறிப்பிட்ட இடங்களில் ஓய்வு அறைகள், நிழற்கூடங்கள், சிமெண்ட் இருக்கைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், அதன்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். ஆய்வின்போது, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு * குடிநீர், கழிப்பறை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை * அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு புகழ்பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Kriwalabathi ,Minister AV Velu ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Krivalabathi ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் போலீஸ்...